காட்டுப்பன்றிகள் அட்டகாசம்.. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் சேதம்.. விவசாயி கண்ணீர்
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் சேதம் இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி (60) என்ற விவசாயிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு பராமரித்து வந்துள்ளார்.

விவசாய பணிகளுக்காக பல மாதங்களாக கடினமாக உழைத்து, உரம், விதை, மருந்து உள்ளிட்ட பல்வேறு செலவுகளை செய்த நிலையில், தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்வதற்காக தான் மேற்கொண்ட பல மாத கால உழைப்பும், முதலீடும் வீணாகிவிட்டதாக விவசாயி முனுசாமி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் விவசாயிக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு அரசு விதிமுறைகளின்படி உரிய நிவாரணத் தொகை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டுமென வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார் விவசாயி முனுசாமி.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
