வேலூரில்.. கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த கருப்பு உருவம்! பேன்சி ஸ்டோரில் களேபரம்!
வேலூர்: ஆம்பூரில் பேன்சி ஸ்டோர் கடையில் கருப்பு நிற நாகப்பாம்பு ஒன்று கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து பதறிப்போன கடை ஊழியர்கள் தீயனைப்புதுறையினருக்கு அழைத்திருக்கின்றனர்.
ஆம்பூர் அருகே, தேவலாபுரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பேன்சி ஸ்டோர் கடையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பகுதியில் இருந்து.. திடீரென நாகப்பாம்பு கடைக்குள் விழுந்திருக்கிறது.

கடையிலிருந்து அலறியடித்து ஓடிய ஊழியர்கள், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு போன் செய்துள்ளனர். அவர்கள் வந்து பாம்பை பத்திரமாக மீட்டு சென்றுள்ளனர். ஒருவேளை இந்த பாம்பு தலைக்குமேல் விழுந்திருந்தால்.. கதையே வேறு மாதிரியாக மாறியிருக்கும்.
மனிதர்கள் தலையின் மீது பாம்புகள் விழுந்தவுடன், கடித்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. பாம்புகள் எதிர்பாராமல் கீழே விழும்போது அவை ஏற்கனவே நிலை தடுமாறி ஒருவித அதிர்ச்சியில் இருக்கும். அப்போது தரைக்கு பதிலாக.. அசைந்து கொண்டிருக்கும் மனித உடலில் மீது விழும்போது, ஏதோ பெரிய விலங்கு தன்னை பிடித்து விட்டதாக நினைத்து உடனடியாக கடித்து விட வாய்ப்பு இருக்கிறது.
பாம்பு தலைமேல் விழும்போது, நம்முடைய உடல் உடனடியாக சிலிர்க்கத் தொடங்கும். கைகளை கொண்டு பாம்பை தட்டி விட நாம் முயற்சிப்போம். இப்படி செய்யும் போது.. பாம்பு தற்காப்புக்காக தன்னை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக கடித்து விடுகிறது. ஆனால், நல்வாய்ப்பாக ஆம்பூரில் இப்படியான சம்பவம் நடக்கவில்லை. பாம்பு தரையில்தான் விழுந்திருக்கிறது.
பொதுவாக நாகப்பாம்புகள் இயல்பில் ரொம்பவும் கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களை பார்த்தால் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு விரும்பும். ஆனால், தப்பிக்க முடியாத சூழல் இருக்கும்போது.. உடனடியாக அது தற்காப்புக்காக கடிக்கத் தொடங்கி விடும். சினிமாவில் காட்டுவதைப் போல அல்லது சீரியல்களில் சொல்வதைப் போல.. நாகப்பாம்புகள் தேடி வந்து பழிவாங்கும் குணம் கொண்டது கிடையாது. மனிதர்களின் காலடி அதிர்வுகளை உணர்ந்தாலே.. அது அங்கிருந்து அமைதியாக விலகிச் சென்று விடும்.
தெரியாமல் நாம் அதை மிதிக்கும் போதுதான் அது கடிப்பதற்கான சூழல் அமைந்து விடுகிறது. இந்த பாம்புகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக வேட்டையாடும். பகல் நேரங்களில் எலி வலைகள், கறையான் புற்றுகளில் ஓய்வெடுக்கும்.
என்னதான் இது சாதுவான குணம் கொண்டிருந்தாலும்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் போல, இது கடித்து விட்டால் விஷம் உயிரை கொள்ளும் அளவுக்கு மிக வீரியமானதாக இருக்கும். நாகப்பாம்பின் விஷம் ரத்தத்தின் வழியாக மூளை தசைகளுக்கு சென்று, நரம்பு சிக்னலை துண்டிக்கும். இதனால் கடிபட்ட இடத்தில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படும். கண் இமைகள் தானாக சொருகி மூடிக்கொள்ளும். பார்வை மங்கி, பேச்சு குளறுதல் ஏற்படும். எச்சில் விழுங்குவதிலும் சிரமம் ஏற்படும். கை கால்களில் பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற உணர்வு தோன்றும். இறுதியாக சுவாச தசைகள் செயலிழந்து.. மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம்.
எனவே நாகப்பாம்பை எங்கு பார்த்தாலும்.. அதை அடித்துக் கொள்ளாமல், அதன் போக்கில் விட்டு விடுவது நல்லது. ஒருவேளை வீடுகளுக்குள் புகுந்து விட்டால்.. தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொண்டு, பாதுகாப்பாக பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். நாமாக குச்சியை, கம்பை எடுத்துக்கொண்டு அடிக்க ஓடுவதோ! அல்லது பிடிக்க முயல்வதோ!! மிகவும் ஆபத்தானதாகும். ஒரு வேலை பாம்பு கடித்து விட்டால், அது நாகப்பாம்போ அல்லது விஷம் இல்லாத பாம்போ எதுவாக இருந்தாலும்.. உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுகுவது நல்லது.




Click it and Unblock the Notifications
