"முஸ்லிமை தொழுகை நடத்தவிடாமல் தடுப்பதே பாவம்".. வேலூர் இப்ராஹிம் வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ''முஸ்லிம் ஒருவரை தொழுகை செய்வதில் இருந்து தடுப்பதே பாவம். யார் உண்மையான முஸ்லிம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லா ஒருவருக்கு மட்டுமே உண்டு. சாதாரண மனிதர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. முஸ்லிமாக இருக்கும் ஒருவர் பாஜக உள்பட எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மசூதிக்குள் தொழுகை நடத்துவதை யாராலும்ம் தடுக்க முடியாது'' என பாஜகவின் வேலூர் இப்ராஹிம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்தவர் சையத் இப்ராஹிம் என்ற வேலூர் இப்ராஹிம். இவர் பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''சேலத்தில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை நடத்த முயன்றேன். ஆனால் என்னை தொழுகை நடத்த விடாமல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகி சையத் மூசா தடுத்தார். நான் பாஜகவை சேர்ந்தவன் என்பதாலே இப்படி செய்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், தனக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ''யார் உண்மையான முஸ்லிம்? யார் உண்மையான முஸ்லிம் அல்ல? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லா ஒருவருக்கு மட்டுமே உண்டு. இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் சாதாரண மனிதர்களுக்கு கிடையாது.
மசூதிக்குள் தொழுகை நடத்தும்போது 'இமாம்' மட்டுமே முன்னிலையில் இருப்பார். மற்ற அனைத்து முஸ்லிம்களும் சரிக்கு சமமாக ஏற்றத்தாழ்வுகளை கடந்து ஒன்றாக இணைந்து தொழுகையில் ஈடுபடுவார்கள். இதனால் மசூதிக்குள் அரசியல் சார்புக்கு இடமில்லை.
இந்த வழக்கில் மனுதாரர் பாஜக, காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரா? என்பது பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. பாஜக அல்லது வேறு எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருந்தால் மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும். அவரை தடுக்க மற்ற முஸ்லிம்களுக்கு உரிமை கிடையாது. முஸ்லிம்கள் மசூதிக்குள் நுழையும்போது தங்கள் அரசியல் உள்பட பிற சார்பு நிலைகளை மசூதியின் வாசலிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும்.
ஒரு தனிநபர் மசூதி கட்டுவதற்கு பங்களிப்பு செய்தாலும் கூட அந்த மசூதிக்கு உரிமை கோர முடியாது. ஏனென்றால் மசூதிகள் அல்லாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மசூதி என்பது அல்லாவிற்கு மட்டுமே சொந்தம். மனிதர்கள் மசூதிகளின் நிர்வாகிகளாக மட்டுமே இருக்க முடியும். ஒரு நபர் முஸ்லிம் என்று இறைவன் தீர்மானித்திருக்கும் பட்சத்தில் அதை மாற்றிக் கூற மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை. இதனால் மசூதிக்குள் ஒரு முஸ்லிம் தொழுவதை இன்னொரு முஸ்லிம் எப்படி தடுக்க முடியும்? அதையும் மீறி ஒரு முஸ்லிமை தொழுகை செய்ய விடாமல் தடுப்பது என்பது பாவச்செயலாகும்.
'ஷரியத்' (முஸ்லிம் தனிநபர் சட்டம்) சட்டம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை மசூதியில் தொழுகை செய்வதிலிருந்து தடுக்க முடியாது என்பதை கூறுகிறது. இந்த 'ஷரியத்' சட்டம் தமிழ்நாட்டில் முழு செயல்பாட்டில் உள்ளது. அதேபோல் 'ஹதீஸ்' (நபிகள் நாயகத்தின் நடைமுறைகள் பற்றிய தொகுப்பு) மிக தெளிவாக ஒரு விஷயத்தை சொல்கிறது. ஒருவர் இஸ்லாமிய கோட்பாடுகளை மீறினால் அதற்கான தண்டனையை 'கியாமத்' நாளில் (தீர்ப்பு நாளில்) இறைவனே வழங்குவார். மற்றபடி மனிதர்கள் யாரும் அவருக்கு தண்டனை வழங்குவதை தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது.
இந்த வழக்கில் மசூதியில் தொழுகை நடத்துவது தொடர்பாக மனுதாரருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சேலம் நகர காவல் நிலையத்தில் 3 எஃப்ஐஆர் பதிவாகி உள்ளது. இருதரப்பினரிடமும் போலீசார் பேசி இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். தனிநபர்களுக்கு இடையிலான கருத்தியல் மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகள் வழிபாட்டு தலங்களுக்கு வெளியேதான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உள்ளே கொண்டு செல்லக்கூடாது'' எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.




Click it and Unblock the Notifications
