‘கமிஷன் நாயகர்’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை நாயகர் பட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமக்கு அறிக்கை நாயகர் என பட்டம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 'ஊழல் நாயகர்' - 'கரப்ஷன் நாயகர்' - 'கமிஷன் நாயகர்' - 'கலெக்ஷன் நாயகர்' என பதில் பட்டம் கொடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இன்று வழங்கினார் மு.க.ஸ்டாலின். இதன் பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகர் பகுதிகளில் நாங்கள் நடத்தி இருக்கிறோம்.

ஏற்கனவே இந்த மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரத்தில், இதை கடுமையாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் வன்மையாக கண்டித்திருக்கிறோம். கண்டித்து மட்டுமல்ல, அதை எதிர்த்தும் வாக்கினை வழங்கியிருக்கிறோம்.

டெல்லியில் போராட்டம்

டெல்லியில் போராட்டம்

அதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதனை கண்டித்து தீர்மானம் போட்டோம். கடந்த செப்டம்பர் மாதமே அதற்காக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடத்தி முடித்திருக்கிறோம். பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி படையெடுத்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை கடந்த 15 நாட்களாக விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதை ஆதரிக்கின்ற விதத்தில், ‘மத்திய அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்' என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

சேலத்தில் போராட்டம்

சேலத்தில் போராட்டம்

சேலத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு நானே சென்றிருந்தேன். சேலம், முதலமைச்சர் பழனிசாமியினுடைய மாவட்டமாக இருக்கின்ற காரணத்தால், அங்கே போராட்டம் வெற்றி பெற்று விடக்கூடாது; அதிகமான அளவிற்கு அங்கு திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் - விவசாய பெருங்குடி மக்களும் - பொதுமக்களும் திரண்டிடக்கூடாது என்கிற ‘நல்ல எண்ணத்தோடு' சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கழகத் தோழர்களும் விவசாயப் பெருங்குடிமக்களும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது மட்டுமல்ல, அவர்களையெல்லாம் கைது செய்து அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபங்களில் காலையிலிருந்து மாலை வரை அவர்களை சிறைபிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள். நான் கலந்துகொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் - போராட்டத்தில் கருப்பு கொடியோடு சற்று ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் பங்கேற்று இருக்கிறார்கள். இன்னுமொரு 25 ஆயிரம் பேர் அதில் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலையை எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, காவல்துறையை வைத்துகொண்டு, அந்தப் பணியை செய்து முடித்து இருக்கிறது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இருந்தாலும், போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி முடித்திருக்கிறோம்.

மழை பாதிப்பு இடங்கள்

மழை பாதிப்பு இடங்கள்

இந்தச் சூழ்நிலையில், கடற்கரையோரத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களில் - இராமநாதபுரத்தில் இருந்து தொடங்கி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து, அந்த மழையின் காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்ற செய்தியையும் நானறிந்து, சேலத்தில் இருந்து உடனடியாக நான் கடலூர் மாவட்டத்திற்குச் சென்று, குறிஞ்சிப்பாடி பகுதியிலும் கடலூர் பகுதியிலும் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மக்களை நான் சந்தித்தேன். நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்தும், வெள்ளம் சூழ்ந்து இருக்கக்கூடிய பகுதிகளையும் நேரடியாக பார்வையிட்டேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தி.மு.க. சார்பில் செய்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து, உடனடியாக தேங்கி இருக்கக்கூடிய நீரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

குடிமராமத்து முறைகேடு

குடிமராமத்து முறைகேடு

ஆனால் இந்த அரசு இதில் அதிகமான அளவிற்கு தீவிரம் காட்டவில்லை. அவர்கள் ஊழலில் - கொள்ளை அடிப்பதில் - லஞ்சம் வாங்குவதில் - கமிஷன் பெறுவதில் - கரப்ஷன் செய்வதில் காட்டுகின்ற வேகத்தை இதில் காட்டியிருந்தால், நிச்சயமாக ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்க முடியும். நாங்கள் சென்று பார்த்த நேரத்தில் அங்கு இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களெல்லாம் எங்களிடத்தில் சொன்னது, ‘தூர் எடுக்கிறோம் - தூர் எடுக்கிறோம் என்று சொல்லி பெயருக்கு அறிவிப்பை விளம்பரத்தை செய்துவிட்டு காண்ட்ராக்ட் கமிஷன் அடித்து கொண்டிருக்கிறார்கள்' என்று ஆதங்கப்பட்டனர். குடிமராமத்து பணியில் பெரிய அளவில் சாதனை செய்து விட்டோம்; அதற்காக விருது வாங்கி விட்டோம் என்று முதலமைச்சர் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அந்த குடிமராமத்து பணியைப் பயன்படுத்திக்கொண்டு அதன் மூலமாக கமிஷன் அடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு கொடுமையான ஆட்சி தான் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவரின் பணி

எதிர்க்கட்சி தலைவரின் பணி

இதையெல்லாம் நாங்கள் இன்று மக்களிடத்தில் போய் எடுத்து பேசினால், முதலமைச்சருக்கு மிகவும் கோபம் வருகிறது - ஆத்திரம் வருகிறது. ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலையே இல்லை எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்' என்கிறார். நாங்கள் அரசியல் செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய நான் அதைத்தான் செய்ய முடியும். அவர் செய்து கொண்டிருக்கும் ஊழலையெல்லாம் ஆதாரத்தோடு நாங்கள் பல்வேறு கூட்டங்களில் எடுத்துச் சொல்கிறோம்; அறிக்கையிலும் வெளியிடுகிறோம். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘அறிக்கை விடுவது அவரது வேலையாக போய்விட்டது. காலையில் ஒரு அறிக்கை - மாலையில் ஒரு அறிக்கை - இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்' என்று சொல்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் வேலையே அதுதான்!

அறிக்கை நாயகர் பட்டம்

அறிக்கை நாயகர் பட்டம்

ஆளும்கட்சி என்னென்ன தவறு செய்கிறதோ, அதனைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்துவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அதுதான் ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய மரபு! அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் எனக்கு பெரிய பட்டத்தையும் கொடுத்து இருக்கிறார். அது என்னவென்றால், நான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி ‘அறிக்கை நாயகர்' என்று பட்டம் கொடுத்திருக்கிறார். மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அறிக்கை விடுவது தவறில்லை!

 ‘கரப்ஷன் நாயகர்’ – ‘கமிஷன் நாயகர்’

‘கரப்ஷன் நாயகர்’ – ‘கமிஷன் நாயகர்’

எனவே, முதலமைச்சர் அந்தப் பட்டத்தை பெருந்தன்மையோடு கொடுத்திருக்கிறார். அதனை நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு பட்டம் கொடுத்துள்ள அவருக்கு நான் ஒரு பட்டம் கொடுக்க வேண்டாமா! ‘ஊழல் நாயகர்' - ‘கரப்ஷன் நாயகர்' - ‘கமிஷன் நாயகர்' - ‘கலெக்ஷன் நாயகர்' இதுதான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நான் தரக்கூடிய பட்டம். தி.மு.க. ஒரு அரசியல் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய்கூசாமல் பேசுகிறார். கார்ப்பரேட்டுகளுக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு பணிந்து போகிறது - எந்த அளவுக்கு துணை நிற்கிறது? அதற்கு அடிபணிந்து ஆதரித்து கொண்டிருப்பவர் யார் என்றால், இந்த ஊழல் நாயகர் எடப்பாடி பழனிச்சாமி தான்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+