ஸ்டாலின் அமைக்கும் “சக்கர வியூகம்”.. திருச்சி சிவாவை முன்வைத்து மெகா கணக்கு! அதிமுகவுக்கு செக்!
சென்னை: இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை களமிறக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்குப் பின்னணியில், அதிமுக - பாஜகவுக்கு செக் வைக்கும் தேர்தல் கணக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில், துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

சட்டசபை தேர்தல் கணக்கு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழரான சிபி ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவியை பாஜக வழங்க உள்ளது. இதன் மூலமாக தமிழரை முக்கிய பதவிக்கு உயர்த்துவது என்ற அடிப்படையிலும், கொங்கு மண்டலத்திலும் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என எதிர்பார்க்கிறது பாஜக மேலிடம்.
மேலும், சி.பி ராதாகிருஷ்ணன், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும் பாஜகவுக்கு தேர்தல் களத்தில் பிளஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், இந்த நகர்வுகளின் மூலம் மீண்டும் கொங்கு மண்டலத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திமுக அமைத்துள்ள எதிர் வியூகம்
இந்நிலையில் தான், திமுக ஒரு எதிர் வியூகத்தை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, இந்தியா கூட்டணி சார்பில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக களமிறக்க முயன்று வருகிறது. பாஜக சிபி ராதாகிருஷ்ணனை களமிறக்கி உள்ள நிலையில், தமிழருக்கு போட்டியாக இன்னொரு தமிழரை நிறுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
திமுக கணக்கு
திருச்சி சிவாவை முன் நிறுத்துவதற்குப் பின்னணியில் திமுகவுக்கு வேறொரு கணக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி சிவா, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளர் ஆக்கி, கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தவரின் ஆதரவை வரும் சட்டசபை தேர்தலில் பெறலாம் என பாஜக கணக்குப் போட்டுள்ள நிலையில், தெற்கு மற்றும், டெல்டா மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தவரை ஈர்க்க திமுக திருச்சி சிவாவை களமிறக்குவதாகத் தெரிகிறது.
அதிமுகவுக்கு செக்
அதிமுக முன்பு முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறிய நிலையில், அதிமுக முக்குலத்தோர் சமூக வாக்குகளை பெருமளவில் இழந்து வருகிறது. மதுரை சுற்று வட்டார மாவட்டங்களில் அதிமுக பல இடங்களில் தோல்வியைத் தழுவியதற்கு, முக்குலத்தோர் வாக்குகள் திமுக பக்கம் திரும்பியது மட்டுமல்லாமல், டிடிவி தினகரன், ஓபிஎஸ் பக்கம் பிரிந்ததும் காரணமாகச் சொல்லப்படுகிறது.
வாக்கு அறுவடை
இந்நிலையில் தான், திருச்சி சிவாவை முன்னிறுத்தி, முக்குலத்தோர் சமூக வாக்குகளை கூடுதலாக ஈர்க்கலாம் என திமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. கொங்கு வேளாளக் கவுண்டர் வேட்பாளரை பாஜக நிறுத்தி உள்ளதன் மூலம், அக்கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் ஆதரவு கிடைத்தாலும், அதை தெற்கிலும், டெல்டாவிலும் ஈடுகட்டலாம் என திமுக எண்ணுவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே அதிமுகவில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக விமர்சனம் உள்ளது. இதனால் மற்ற சமூகத்தினர் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் திருச்சி சிவாவை முன்னிறுத்தி, அந்த வாக்குகளை அறுவடை செய்யலாம் என திமுக தலைமை கணக்குப் போடுவதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications