எளிமையானவர், ஆடு மேய்த்தவர்னு பேசுனதாலதான்.. வாட்சுக்கு ரசீது கேட்கிறோம் அண்ணாமலை- ராஜிவ் காந்தி
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச் ஏன் இத்தனை விவாதப் பொருளாக மாறியுள்ளது என்பது குறித்து திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விளக்கமளித்துள்ளார். அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்சுக்கு ரசீது கேட்டு கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவர் தொடர்ந்து திமுகவை அவதூறாக பேசி வந்ததாக திமுகவின் ஆர்.எஸ் பாரதி, ரூ 100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை பதிலளிக்கையில் நான் ஒரு ஏழை விவசாயியின் மகன். என் வீட்டில் இருப்பது ஆடு, மாடு, உடைந்த டப்பாக்கள், என்னிடம் ரூ 100 கோடி கேட்டால் நான் என்ன செய்வேன் என கிண்டலாக பதிலளித்திருந்தார்.

அண்ணாமலை
இந்த நிலையில்தான் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்த பிரச்சினை பெரிதானது. அவர் ரூ 8 லட்சம் செலவில் வெளிநாட்டு நிறுவனத்தின் வாட்ச் கட்டிக் கொண்டுள்ளார் என திமுகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஏழை விவசாயிக்கு ரூ 8 லட்சம் வாட்ச் எப்படி வந்தது, இதை அவர் வாங்கியிருந்தால் ஏன் சட்டசபை தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றெல்லாம் கேள்விகளை திமுக எழுப்பியுள்ளன.

அண்ணாமலை தேசியவாதி
இந்த நிலையில்தான் அண்ணாமலை நான் ஒரு தேசியவாசி என்பதால் ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட வாட்ச்சை கட்டியுள்ளேன். இது என் உயிர் என் உடலில் இருக்கும் வரை இந்த வாட்சை கட்டியிருப்பேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த பிரச்சினையில் நுழைந்து, ரபேல் வாட்ச் எப்படியும் 5 லட்சத்திற்கும் மேல் விலை இருக்கும். இதை வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தாக வைத்திருப்பவர் வாங்கியது எப்படி. இதற்கான ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாமே என தெரிவித்திருந்தார்.

சுற்றுப்பயணம்
இதற்கு பதிலளித்த அண்ணாமலை தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அப்போது எனது வாட்ச் குறித்த பில்லையும் எனது சொத்துக் கணக்கையும் தமிழக மக்களுக்கு வெளியிடுவேன் என கூறியிருந்தார். ஆனாலும் விடாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சொத்து கணக்கை யார் கேட்டது, வாட்ச் பில் இருக்கா இல்லை, இருந்தால் வெளியிடுங்கள், இல்லாவிட்டால் வாட்ச் எப்படி கிடைத்தது என சொல்லுங்கள் என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி
இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, அண்ணாமலை எந்த வாட்ச் கட்டியிருந்தால் என்ன, அதனால் தமிழகத்திற்கு என்ன பயன் என கேட்டிருந்தார். இப்படியாக பாஜகவுக்கும் திமுகவுக்கும் இந்த வாட்ச் குறித்த பிரச்சினை பூதாகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறியிருப்பதாவது: ராகுல் காந்தியின் டி-சர்ட்டை வைத்து அரசியல் செய்த பாஜக-வினர்போல்,வாட்ச்சை வைத்து இழிவான அரசியல் செய்யும் நோக்கம் திமுக-வினருக்கு இல்லை.

ஏன் விவாதம்
ஏன் இது விவாதப் பொருளாகிறது என்றால் மேடைக்கு மேடை,சாதாரண எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்' ஆடு மேய்த்தவன் என்று புனிதம் பேசி எளிமையானவன் என்று விளம்பரம் செய்யும்போதுதான் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா என்று கேள்வி வருகிறது.எந்த திமுக அமைச்சரும் கொள்கை அடிப்படையில்தான் பிரசாரம் செய்துவருகிறாரே தவிர நூறு ரூபாய்க்குச் செருப்பு போட்டோம் என்று பிரசாரம் செய்வதில்லை!! இவ்வாறு ராஜீவ் காந்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications