இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாடு அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தின் சிறுகனூரில் "ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் இந்த பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாடு திமுகவுக்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடாகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி தொடர்பான பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வரான ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தின் சிறுகனூரில் "ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பெயரில் மிகப் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது, இந்த மாநாடு திமுகவின் தேர்தல் பணிகளுக்கான முக்கிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

திமுக திருச்சி மாநாடு
மாநாடு நடைபெறும் இடத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 7 லட்சம் பேர் நின்றபடி மாநாட்டை பார்வையிடும் வகையிலும் இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருவோருக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் மெகா திட்டம்
இந்த மாநாடு பிற்பகல் 3 மணியளவில் தொடங்க உள்ளது. ஆரம்ப நிகழ்ச்சியாக கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். அதோடு அப்துல் குத்தூஸ் தலைமையிலான இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு வருகை தருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு மேடைக்கு சென்று உரையாற்றுகிறார்.
ஸ்டாலின் அரசியல் அறிவிப்பு
இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல புதிய அரசியல் மற்றும் நிர்வாக அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களை கவரும் வகையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்த மாநாடு நடைபெறும் சிறுகனூர் இடம் திமுக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
திருச்சி திருப்புமுனை மாநாடு
இதே இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்ததாகவும், அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் நினைவுகூர்கிறார்கள். அதேபோல் இந்த முறை நடைபெறும் மாநாடும் திமுகவுக்கு தேர்தல் முன்பான மிக முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 10 லட்சம் மக்கள் பங்கேற்கும் என கூறப்படும் இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிடக்கூடிய அறிவிப்புகள் அரசியல் வட்டாரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications