டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. சரியாக சொல்லப்போனால் 1 வாரமே மிச்சமிருக்கும் நிலையில், 'களம்' அனல் பறக்கிறது. ஆனால், வழக்கமாகத் தேர்தல் களத்தில் ஒலிக்கும் 'உள்ளூர்' குறைகளும், லோக்கல் பிரச்சனைகளும் இந்த முறை மிஸ்சிங். அதற்குப் பதிலாக, தெருவுக்குத் தெரு தி.மு.க மேடைகளில் ஒலிப்பது ஒன்றே ஒன்றுதான் - "டெல்லி vs தமிழ்நாடு!"
டெல்லி vs தமிழகம்: ஒரு மெகா ஹிட் ஸ்கிரிப்ட்
அறிவாலயத்தின் இந்தத் தேர்தல் வியூகம் மிகவும் தெளிவானது. ஆளுங்கட்சி மீதான 'ஆன்டி-இன்கம்பன்சி' (எதிர்ப்பு அலை) மெல்ல எட்டிப் பார்க்கும் போதெல்லாம், அதைத் திசைதிருப்ப தி.மு.க கையில் எடுத்திருக்கும் ஆயுதம் 'மாநில சுயாட்சி'. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, நிதிப் பகிர்வு எனப் பட்டியலிட்டு, "தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் டெல்லிதான்" என்கிற வியூகத்தை தி.மு.க வெற்றிகரமாகக் கட்டமைத்திருக்கிறது.

ஏன் இந்த டெல்லி அட்டாக்?
தி.மு.க-வின் இந்த மூவ் வெறும் அரசியலல்ல, அது ஒரு புத்திசாலித்தனமான தற்காப்பு ஆட்டம். தமிழகத்தின் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் மூலவேர் டெல்லியில் இருப்பதாக வியூகத்தை தி.மு.க மிகத் துல்லியமாக வரைந்திருக்கிறது.
நிதி நெருக்கடி: "நாங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு டெல்லி திருப்பித் தருவது வெறும் 29 பைசா தான்" என்ற முழக்கம், பாமர மக்களிடமும் "நமக்குக் கிடைக்க வேண்டிய காசை மோடி அரசு தரவில்லை" என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்திருக்கிறது.
நீட் விவகாரம்: சமீபத்தில் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காததை, "தமிழக மாணவர்களின் கனவை டெல்லி சிதைக்கிறது" என உரிமைக் குரலாக மாற்றியதில் ஸ்டாலின் டீம் செம ஸ்கோர் செய்திருக்கிறது.
அதாவது, உள்ளூர் குறைபாடுகளைப் பேச விடாமல், ஒரு 'பெரிய பூதத்தை' (டெல்லி) காட்டி, "அதை எதிர்க்க நான் தான் சரியான ஆள்" எனத் தன்னை ஒரு பாதுகாவலனாக (Protector) முன்னிறுத்துகிறார் முதல்வர்.
எதிர்க்கட்சிகளை 'டெல்லி' கூடைக்குள் தள்ளும் யுக்தி!
தி.மு.க-வின் அட்டாக்கிலிருந்து அதிமுக-வும் தப்பவில்லை. ஆனால், அதிமுக-வை அவர்கள் ஒரு தனிப்படையாகவே பார்ப்பதில்லை. "டெல்லி சொல்வதைக் கேட்கும் அடிமைகள்" என்று முத்திரை குத்துவதன் மூலம், எடப்பாடியின் பலத்தைக் குறைத்து, பிம்பத்தை சிதைக்கிறார்கள். அதிமுக-வை விமர்சிப்பதைக் கூட ஒருவிதமாக "டெல்லியின் கிளை அலுவலகம்" என்ற கோணத்திலேயே கொண்டு செல்வது, நடுநிலை வாக்காளர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
இன்னொரு பக்கம், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'.. ஆரம்பத்தில் இருந்தே விஜய்யை விமர்சிப்பார்கள் என்று பார்த்தால், அறிவாலயம் செம 'சைலண்ட்' மெயின்டெய்ன் செய்கிறது. விஜய்யை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விடுவதன் மூலம், அவருக்குக் கிடைக்க வேண்டிய 'முக்கியத்துவத்தை' அப்படியே தட்டிப் பறிக்கிறார்கள். "அவர் வரட்டும்... அவரும் டெல்லி ஸ்கிரிப்ட் தான் பேசுவார்" என்ற ரீதியில் ஒரு மெல்லிய கிண்டலோடு நகர்ந்து விடுகிறார்கள்.
ஸ்மார்ட் பிளேயர் தி.மு.க!
இந்தத் தேர்தலில் தி.மு.க விளையாடுவது ஒரு 'ஹை-லெவல்' பொலிட்டிக்கல் செஸ்.
திசைதிருப்புதல்: மாநில அரசின் மீதான சிறு சிறு விமர்சனங்களை, மத்திய அரசுடனான பெரும் போராட்டமாக மாற்றியது.
உணர்வுசார் அரசியல்: "தமிழ் மண், தமிழ் மொழி, மாநில உரிமை" எனத் தமிழர்களின் சென்டிமென்ட்டைத் தட்டியெழுப்பி, தேர்தலை ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக மாற்றியது.
டெல்லி உண்மையிலேயே தமிழகத்திற்கு நிதிப் பகிர்விலும், உரிமைப் பகிர்விலும் செய்த சில தவறுகளை (ஜி.எஸ்.டி நிலுவை, மெட்ரோ ரயில் நிதி தாமதம்) தி.மு.க மிகச்சரியாக அறுவடை செய்கிறது.
"எதிரி யார்?" என்பதை முடிவு செய்வதில்தான் ஒருவனின் வெற்றி அடங்கியிருக்கிறது. தி.மு.க தன் எதிரியாக எடப்பாடியையோ, விஜய்யையோ நினைக்கவில்லை; நேரடியாக மோடியையும் அமித் ஷாவையும் களமிறக்கி, தமிழகத்தை ஒரு 'கோட்டையாக' மாற்றி நிற்கிறது.
இந்த 'டெல்லி எதிர்ப்பு' அலை ஓட்டாக மாறுமா அல்லது மக்கள் உள்ளூர் பிரச்சினைகளை யோசிப்பார்களா? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!












Click it and Unblock the Notifications