“கன்னடன் எனப் பெருமை பேசியவர்தானே அண்ணாமலை?” - ஆவேசமான அரசியல் தலைவர்கள்
சென்னை: கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக அந்த மேடையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருந்தும், இந்தச் சம்பவம் நடந்துள்ளது வேதனை எனப் பல தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
'இந்தச் சம்பவம் ஒரு மொழி வெறிச் செயல்' என நடுநிலையாளர்கள் கூட கருத்து கூறியுள்ளனர்.
இந்தச் சர்ச்சை பற்றி சிலரைக் கருத்துக் கேட்டோம். அண்ணாமலையின் செயலை ஒரு மித்த கருத்தில் பலரும் எதிர்த்தே சொன்னார்கள்.

வேதனையான சம்பவம்: முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், "கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக பாஜக சார்பில் பிரச்சாரம் செய்ய அண்ணாமலை சென்றுள்ளார்.
அப்படி அவர் கர்நாடகாவில் கலந்து கொண்ட ஒரு பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ்த் தாய் பாட்டு இசைக்கப்பட்டுள்ளது. அப்பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அதை உடனடியாக நிறுத்துவிட்டு, கர்நாடக மாநிலத்தின் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்துள்ளார் அம்மாநில பாஜக அமைச்சர் ஒருவர்.
இந்தப் பாடலை ஒலிக்கவிட்டபோதும், தமிழ்த் தாய் வாழ்த்தை நிறுத்த சொன்னபோதும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதே மேடையில்தான் உட்கார்ந்திருக்கிறார். அவர் கண் முன்பாக தான் இத்தனையும் நடக்கிறது.
ஆனால், அதைக் குறித்து அண்ணாமலை கவலையும் படவில்லை, மறுப்பும் சொல்லவில்லை. பின்னால் இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி பலர் விமர்சனம் செய்ததும், 'அந்தப் பாடல் மெட்டு தவறாக இருந்தது. ஆகவேதான் அமைச்சர் நிறுத்த சொன்னர்' என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: அங்கு மெட்டு என்பது பிரச்சினை இல்லை. அங்கு இசைக்கப்பட்டது தமிழ்த்தாய் வாழ்த்துதான்.
பாஜகவின் ஒரு மாநிலத் தலைவர் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியிலேயே இந்த அவமரியாதை நடந்திருக்கிறது. அதை அண்ணாமலை கண்டிக்கத் தயாராக இல்லை.
அதற்கு மாறாக அதனை நியாயப்படுத்துகிறார். அப்படி என்றால் தமிழ் மக்கள் மீதும், தமிழ்த் தாய் வாழ்த்தின் மீதும் உங்களுக்கு என்ன பற்று இருக்கிறது?. பாசம் இருக்கிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.
நடந்த இந்தச் சம்பவத்திற்கு அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்கிறார்.

கன்னடன் எனப் பெருமை பேசியவர் அவர்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, "தமிழ்நாட்டு பாஜக கட்சியைச் சேர்ந்த அண்ணாமலையும், கர்நாடகாவைச் சேர்ந்த மந்திரி ஒருவரும் சேர்ந்து கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அதில், தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படுகிறது. அந்தப் பாடலைக் கேட்ட, கர்நாடக பாஜக அமைச்சர் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்துவந்து, நிறுத்த சொல்கிறார்.
மாறாக, கர்நாடக மாநில கீதத்தை ஒலிக்கவிடச் சொல்கிறார். உடனே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில், பாதியில் நிறுத்திவிட்டு, கர்நாடக கீதம் ஒலிக்கவிடப்படுகிறது.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு தமிழ்நாட்டு பாஜகவில் மாநிலத் தலைவரான அண்ணாமலை அப்படி நிற்கிறார். அண்ணாமலை அங்கே மௌனமாக அமர்ந்திருந்தது, மிக அவமானம். தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை; தமிழர்களுக்கே விரோதமான ஒரு கட்சி பாஜக என்பதை இச்சம்பவத்தைக் கொண்டு புரிந்துகொள்ள முடிகிறது.
அண்ணாமலை இதற்கு முன்பே ஒரு சம்பவத்தின் போது 'நான் பெருமை மிகு கன்னடிகா' என்று சொன்னவர்தான். அதைப் பெருமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தவர்தான்.
அவரைப் பொறுத்தவரை அதிகாரமும் பணமும் எங்கே இருக்கிறதே அதுதான் முக்கியம். அவருக்குத் தமிழர்களுடைய சுயமரியாதையோ, தமிழர்களின் தன்மானமோ அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் முக்கியமில்லை" என்கிறார்
இது பற்றி வைகோ, "கர்நாடக மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா திடீரென்று குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அத்தோடு கன்னட மொழி பாடலையும் இசைக்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி: அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எவருக்கும் கன்னட மொழி தெரியவில்லை என்பதை அவர்களே வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்டச் சூழலில் அங்குள்ள தமிழ் மக்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பாவும், அவரது பா.ஜ.க.வும் இழிவு செய்துள்ள போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இதனைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைவர்கள் உள்ளம் குமுறி அறிக்கை வெளியிட்டதை அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாகப் பொறுப்பில்லாமல் உளறிக் கொட்டி அறிக்கை என்ற பெயரில் தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்பது மட்டுமல்ல, உலகின் மூத்த மொழிகளில் ஒன்று" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "கர்நாடகத்தில் நிகழ்ச்சி நடந்தாலும் அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் தான் அந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கச் செய்யப்படுவது தான் முறையாகும்.
கன்னட மொழி வெறியராக அறியப்பட்ட ஈஸ்வரப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவரது கடமை. ஆனால், மேடை நாகரிகம் கூட இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாதியில் நிறுத்தியதன் மூலம் தமிழ்த்தாயை இழிவுபடுத்தியுள்ளார்.

தடுக்க முடியாத அண்ணாமலை: ஈஸ்வரப்பாவும், பிற அமைப்பாளர்களும் நடந்து கொண்டது பெருந்தவறு. அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இத்தகைய மொழி வெறிச்செயலை அந்த மேடையிலிருந்த தமிழர்கள் எவரும் தட்டிக் கேட்காதது வருத்தம் அளிக்கிறது" எனக் கூறியுள்ளார்
இந்த விவகாரம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, "தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் இரா.குமார், "முன்பே இப்போது உள்ள ஜெயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது இதேபோல் அவமதித்தார். தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்து நின்றார்.

ஹெச். ராஜா முதல் அண்ணாமலை வரை: ஹெச். ராஜாவின் அப்பா ஒரு அகராதி வெளியிட்டார் இல்லையா? அப்போது நடந்த சம்பவம் இது. ஏன் என்று கேட்டதற்கு, 'தியானத்திலிருந்தேன்' என்றார். அதேபோல் அண்ணாமலைக்குத் தமிழ்ப் பற்றும் கிடையாது. அவர் தமிழை மதிப்பவரும் கிடையாது.
முன்பே நானும் திராவிடன் தான் என்றார். அப்படி என்றால் திராவிட கருத்துகளை அவர் ஏற்பாரா? அவர் வழக்கமாகச் சொல்வார். அவரைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்கிறார்












Click it and Unblock the Notifications