“திமுக எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்
சென்னை: தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் சேர மறுத்து போராடி வருவதால் மாதக்கணக்கில் வருவாய் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில் உள்ள 50-ஆம் வட்டத்தில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக பணியும், ஊதியமும் வழங்கப்படாமல் வறுமையிலும், மன உளைச்சலிலும் வாடி வந்த தூய்மைப் பணியாளர் டி. ரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூய்மைப் பணியாளராகப் பணியாற்றியவர், வேலை இல்லாத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து எதிர்க்கட்சிகள், திமுக அரசையும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட ரவிக்குமார் என்ற தூய்மைப் பணியாளர், மிகுந்த மன உளைச்சலின் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும் அரசின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் பல அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது.
தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்த மக்கள் விரோத அரசை இனி எதிர்க்க முடியாது என நம்பிக்கையிழக்கும் சாமானியர்கள், தற்கொலையைத் துணையாக நாடுவது மனித இனத்திற்கே ஆபத்தானது.
தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications