நீதிபதிக்கு டிடிவி தினகரன் பாடம் எடுக்கக் கூடாது! ஆணையங்களின் அறிக்கை பற்றி மனம் திறந்த ராஜீவ்காந்தி
சென்னை: அறிக்கையில் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் எப்படி அறிக்கை தயாரிக்க வேண்டும் என நீதிபதிக்கு டிடிவி தினகரன் பாடம் எடுக்கக் கூடாது என திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி கூறியிருக்கிறார்.
விசாரணை ஆணையங்களில் அரசு எந்த தலையீடும் செய்யவில்லை என்றும் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் ராஜீவ்காந்தி மிகத் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார் ராஜீவ்காந்தி.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்துள்ள அறிக்கைகள் பற்றி ஒன் இந்தியா தமிழிடம் மனம் திறந்துள்ளார் அவர். அதன் விவரம் வருமாறு;

ஜெயலலிதா மரணம்
''ஜெயலலிதா மரணத்தில் நிலவி வந்த மர்மத்தை நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறது திமுக அரசு. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். என்னை பொறுத்தவரை இந்த ஆணையமாக இருந்தாலும் சரி அருணா ஜெகதீசன் ஆணையமாக இருந்தாலும் சரி அரசின் தலையீடு துளி அளவு கூட இல்லை என்பதை ஆணித்தரமாக கூற முடியும். அப்படியிருக்கும் போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை அரசியல்வாதி அறிக்கையை போல் உள்ளதாக டிடிவி தினகரன் கூறியிருப்பது, அவருடைய சித்தியை காப்பாற்றுவதற்காக தானே வேறு நோக்கமல்ல.''

சட்டத்தில் இடமில்லை
''ஒரு நீதிபதியை பார்த்து இந்த வார்த்தையை தான் பயன்படுத்த வேண்டும், இதை பயன்படுத்தக் கூடாது, இந்த உவமையை தான் கூற வேண்டும் இதை ஏன் கூறினீர்கள் என்றெல்லாம் யாரும் கேட்கமுடியாது. வழக்கறிஞராக சொல்கிறேன் இதற்கு சட்டத்தில் இடமில்லை. இன்னொரு விஷயத்தை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும், அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 2 ஆணையங்களுக்கும் அதிமுக ஆட்சியிலேயே சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. 2 ஆணையங்களையும் செயல்படாமல் வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.''

திமுக அரசு
''திமுக அரசு அமைந்த பிறகு தான் 2 ஆணையங்களுக்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த 2 அறிக்கைகளும் வெறும் தாக்கல் செய்யப்பட்டதோடு முடிந்துவிடாது, நிச்சயம் அதன் மீதான விசாரணைகளும், நடவடிக்கைகளும் இருக்கும். எடப்பாடி பழனிசாமி டிவியில் பார்த்துத் தான் துப்பாக்கிச் சூட்டை தெரிந்துகொண்டதாக கூறியது உட்பட இன்னும் அவர் பேசிய பல பொய்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்படியாக என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு செய்யும் என்பதே எனது பதில்.''

யாரையும் காப்பாற்றாது
''விசாரணை ஆணையங்களில் அரசு எந்த தலையீடும் செய்யவில்லை, யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.'' இவ்வாறு திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி 2 ஆணையங்களின் அறிக்கை பற்றியும் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications