வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாத அண்ணாமலை துணை முதல்வரை ஒருமையில் பேசுகிறார்: தமிழன் பிரசன்னா அட்டாக்
சென்னை: "ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாத அண்ணாமலை, எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த எங்கள் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறார்" என திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயை தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. ஏற்றால் தான் நிதி" எனத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக அரசையும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாகச் சாடினார்.
தமிழன் பிரசன்னா பேசுகையில், "திமுக இந்தி திணிப்புக்குத் தான் எதிரி. இந்திக்கு எதிரி அல்ல. ஆனால் மத்திய பாஜக அரசு இந்தி, இந்து இந்துத்துவா என்ற அடிப்படையில் இந்திய மொழியைத் திணித்து சமஸ்கிருதத்தைகொண்டு வருகிறது. எழுத்து வடிவம் கூட இல்லாத ஒரு மொழிக்குக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கி தமிழ் மொழியைப் புறக்கணிக்கிற செயலை மத்திய பாஜக அரசு செய்கிறது.
இதையெல்லாம் கணித்துத் தான் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் எனச் சட்டம் கொண்டு வந்தார். 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படை தரவுகள் கூட தெரியாமல் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழ் பாடம் கட்டாயம், ஆங்கில படம் கட்டாயம் இல்லையா? எனக் கேட்கிறார்.
தமிழ்நாடு அரசு அன்றைக்கு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 2006இல் கருணாநிதி கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத ஒருவர் தான் பாஜகவின் தமிழக மாநில தலைவராக இருக்கிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி. மத்திய பாஜக அரசின் முழு நோக்கம் சமஸ்கிருதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் வர்ணாசிரம ஆட்சி முறையைக் கொண்டு வருவது தான் மத்திய பாஜக அரசின் நோக்கம். புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைக் கொண்டு வர பாஜக அரசு முயற்சிக்கிறது
தமிழக மக்களை பாஜகவிற்கு பிடிக்கவில்லை. தேசிய கல்வி கொள்கையை காரணம் காட்டி கல்வி நிதியை மத்திய அரசு மறுக்க முடியாது. இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்தவே பாஜக அரசு முயற்சிக்கிறது. கவுன்சிலர் கூட ஆக முடியாதவர் தான் அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து அண்ணாமலை எப்படி ஒருமையில் பேசலாம்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் தமிழன் பிரசன்னா.
நேற்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்,"இங்க இருக்கிற அலப்பறை பசங்க.. சொந்த ஊரை தாண்டினால் யாருக்குமே தெரியாது.. நான்கு அல்லக்கைகளை வைத்துக்கொண்டு அண்ணன் வருகிறார் என்று சொன்னால் தான் தெரியும். இந்த அல்லக்கைகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து விமர்சிக்கின்றனர்.
நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு" என ஒருமையில் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications