பெண்களிடம் தவறாக பேசினேனா? வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட் தொடர்பாக ராஜீவ் காந்தி விளக்கம்!
சென்னை: திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு பின்னணியில் பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டது. ராஜீவ் காந்தி பெண்களிடம் அநாகரிகமாக பேசியதாக ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், ராஜீவ் காந்தி பதவி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் பெண்களிடம் தவறாக பேசியதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் ராஜீவ் காந்தி. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே கட்சியின் முக்கிய பிரிவாக கருதப்படும் திமுக மாணவரணியின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். திமுக சார்பில் தொலைக்காட்சி விவாத மேடை தொடங்கி கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் விருந்தினராக ராஜீவ் காந்தி பங்கேற்று வந்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் அவர் ஒரு தொகுதியில் வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இப்படியான நிலையில் திடீரென மாணவரணி செயலாளர் பதவி ராஜீவ் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவர் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி வகிந்து வந்த மாணவரணி செயலாளர் பதவிக்கு முதல் முறையாக பெண் நிர்வாகியான ஜெ.வீரமணி நியமனம் செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு பின்னணியில் பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டன. அவர் தலைமைக்கு நெருக்கமாக தன்னைக் காட்டிக் கொண்டு டெண்டர் விவகாரம் முதல் பல்வேறு விஷயங்களில் நேரடியாக தலையிட்டது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் மோதல் என பல காரணங்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் ராஜீவ் காந்தி பெண்களிடம் அநாகரிகமாகப் பேசியதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் பகிரப்பட்டது. இது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு ராஜீவ் காந்தி விளக்கமளித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல. யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது.
இதை எல்லாம் வைத்து யார் பேசியமாதிரியும் உருவாக்கலாம் . நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை .யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications