சாட்டையை சுழற்றும் திமுக.. நீட் தேர்விற்கு எதிராக தொடங்கிய.. அறவழி உண்ணாவிரத போராட்டம்.. அதிரடி
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது.அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.

அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. இதையடுத்து பெரும் தாமதத்திற்கு பின் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த சட்டம் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் நீட் தேர்விற்கு எதிராக சட்ட போராட்டம் செய்வதுதான் ரகசியம் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.
மீண்டும் எதிர்ப்பு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த எதிர்ப்பை தீவிரம் ஆக்கி உள்ளது.
இந்த நிலையில்தான் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மதுரை தவிர்த்து தமிழ்நாடு முழுக்க இன்று போராட்டம் நடைபெறுகிறது. மதுரையில் வரும் 23ம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது. அதிமுக பொதுக்கூட்டம் காரணமாக மதுரையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவில்லை. நீட் குறித்து ஆளுநரின் பேச்சு, மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தில் எம்பி கனிமொழி கலந்து கொள்கிறார். மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள் இந்த உண்ணாவிரத போராட்டங்களை தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடக்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்: முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அதில் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021-க்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் துரதிருஷ்டவசமான விளைவுகள் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் வழங்கிடக் கோரி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது என்றும், அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்ததாகவும், இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021' (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021), தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு, 18-9-2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு ஆளுநரால் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டது.
8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக மாண்புமிகு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டதாகவும், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications