ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மா.செக்கள் கூட்டம்.. விவாதிக்கப்படும் விஷயம் இதுதான்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை காலை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" நாளை (09-11-2025 ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் என அழைக்கப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 4 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரப் பணிகள் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்த உகந்த காலம் இதுவல்ல என்றும், தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்றும், இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை அவசர வழக்காக கருதி இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, வரும் 17 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் தான், SIR பணிகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறது திமுக. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications