விஜய் சார்.. இது அரசியல் நடுநிலையா? பாஜகவின் பின்னணி விளம்பரமா? - வைஷ்ணவி சரமாரி அட்டாக்!
சென்னை: அண்மையில் திமுகவில் சேர்ந்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய்யை வெளுத்து வாங்கி வருகிறார். இந்நிலையில், நேற்று வெளியான அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் சொன்ன கருத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார் வைஷ்ணவி.
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த வைஷ்ணவி, நாள்தோறும் விஜய்யை தாக்கி சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், வரும் ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது. 5 மாதங்களிலேயே இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி இருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய் விமர்சனம்
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேற்று இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன் எனத் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழ்நாடு காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை திமுக தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என விமர்சித்திருந்தார்.
வைஷ்ணவி பதிலடி
இந்நிலையில் விஜய்க்கு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் திமுகவின் வைஷ்ணவி. எக்ஸ் சமூக வலைதளத்தில் விஜய்க்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி. திமுகவை மட்டும் விஜய் ஆத்திரமாக விமர்சிப்பதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
வைஷ்ணவி வெளியிட்டுள்ள பதிவில், "நீதியை அரசியல் ஆதாயமாக மாற்றாதீர்கள் விஜய். பாதிக்கப்பட்ட மாணவியின் உணர்வுகளையும் நீதியின் பண்பையும் மதிக்க வேண்டிய நேரம் இது! இந்த வழக்கில் தீவிர சட்ட நடவடிக்கைகள், Special Investigation team அமைத்தல், குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்தல் என தமிழக அரசு, சட்டம் தவறாமல் செயல்பட்டுள்ளது.
நாடக அரசியல் விஜய்
இந்த வழக்கில் FIR கசியல் தொடர்பாக அ.தி.மு.க மற்றும் உங்களைப் போன்ற ஆட்கள் அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவலைப் பரப்பினர். ஆனால் நீதிமன்றம் "இது காவல்துறையின் தவறல்ல, IPC -இலிருந்து BNS - க்கு மாறும்போது ஏற்பட்ட digital glitch என்று உறுதிப்படுத்தியது. அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து தி.மு.க அரசை குறை சொல்வதிலேயே இருக்கிறீர்கள்.
தவறுகளை மறைக்காமல் நீதியை நிலை நிறுத்தியதில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினின் நேர்மையும் பொறுப்பும் வெளிப்படுகிறது. நாடக அரசியலை அரங்கேற்றும் உங்களுக்கு நீதியின் பண்பும் அரசின் நேர்மையும் புரியாது. எதுவாக இருந்தாலும் புரிந்து கொண்டு அறிக்கை இடுங்கள்! நேர்மையான ஆட்சி உண்மையை ஏற்கும், பொய்யை பரப்பாது!!" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பெயரை கூட சொல்லலயே - வைஷ்ணவி
மேலும் ஒரு பதிவில், "அ.தி.மு.க வை சேர்ந்த நபர்கள் குற்றவாளிகளாக இருந்த பொள்ளாச்சி வழக்கில், அ.தி.மு.கவின் பெயரை கூட சொல்வதற்கு தயங்கியவர், இப்போது திமுகவின் மீது ஆத்திரம் காட்டுகிறார். இது அரசியல் நடுநிலையா அல்லது பா.ஜ.க வின் பின்னணி விளம்பரமா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார் வைஷ்ணவி.












Click it and Unblock the Notifications