தலைநகரில் ஒரு தொகுதி.. திமுகவிடம் மல்லுக்கட்ட தயாராகும் விசிக, கமல்.. இறங்கி வருவாரா ஸ்டாலின்?
சென்னை: சென்னையில் ஒரு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன. குறிப்பாக விசிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தலைநகரில் ஒரு தொகுதியை கேட்டு திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பல்வேறு கட்சிகளும் இணக்கமாகவே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு விலகினால், அந்த இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டதாக தெரிகிறது. இதனிடையே பிப்ரவரி 22ஆம் தேதி திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

இதற்கான குழுவை இன்னும் சில நாட்களில் திமுக தலைமை வெளியிடும் என்று கருதப்படுகிறது. இதனிடையே இம்முறை திமுகவின் கோட்டையாக கருதப்படும் தலைநகர் சென்னையில் ஒரு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில் சில கூட்டணி கட்சிகள் குறியாக இருக்கின்றன. இதனால் சென்னையில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் காண்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.
குறிப்பாக வேளச்சேரி மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 2021ல் மக்கள் நீதி மய்யம் கட்சி மதுரவாயல் தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகளும், வேளச்சேரி தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகளும் பெற்றது. இந்த 2 தொகுதிகளை மநீம குறி வைத்திருக்கிறது. அதேபோல் திருப்போரூர் தொகுதி விசிக வசம் இருக்கிறது.
ஒருவேளை அந்த தொகுதியை திமுக கேட்டால், வேளச்சேரி தொகுதியை கைப்பற்றும் முடிவில் விசிக உள்ளது. இந்த தொகுதியில் எஸ்எஸ் பாலாஜி அல்லது ஆளூர் ஷா நவாஸ் போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு வேளச்சேரி தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் வேளச்சேரி தொகுதி இல்லையென்றாலும், அடுத்த இலக்காக ஆர்கே நகர் தொகுதியை விசிக குறி வைத்திருக்கிறது. ஆனால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ள நகர்ப்புற பகுதிகளில் விஜய்யின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், திமுக நேரடியாக களமிறங்க ஆலோசித்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications