உதயநிதிக்கு எங்கே எப்படி பேசணும்னு தெரியல.. இப்படியே பேசிட்டு இருந்தால்.. கவலையில் திமுகவினர்
உதயநிதி ஸ்டாலினின் பிரச்சார பேச்சுக்கு திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: உதயநிதி ஸ்டாலின் எங்கல்லாம் பிரச்சாரத்துக்கு போகிறாரோ, அங்கெல்லாம் எங்க கட்சி மானமே போகுது என்று திமுகவினர் புலம்புகிறார்களாம்!
இந்த முறை உதயநிதிக்கு சீட் தருவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நல்லவேளையாக அது தவிர்க்கப்பட்டு வெறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கருணாநிதியின் பேரன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர் என்ற அந்தஸ்தை தனக்கானதாக தக்க வைத்து கொண்டார் உதயநிதி! இதனால் செல்லும் இடமெல்லாம் இளசுகள் கூட்டம் களை கட்டுகிறது இது திமுகவுக்கு பிளஸ்தான்!

அழகான வேட்பாளர்
ஆனால் உதயநிதி வாயை திறந்தாலே யாரையாவது மிக மோசமாக விமர்சனம் செய்வதைதான் பெருமளவு சகித்து கொள்ள முடியவில்லை. தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, "தமிழச்சி தங்கப்பாண்டியன் ஓர் அழகான வேட்பாளர்" என்றார். இதை கேட்டதும் தமிழச்சி வெட்கம் அடைந்தார். உடனே சமாளித்த உதயநிதி, அழகு என்று சொன்னது தமிழ் மொழியை என்று சமாளித்து முடித்தார். இருந்தாலும் இவர்கள் இருவரையும் இணைத்து மீம்ஸ்கள் உருவாக தொடங்கிவிட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை.

கதிர் ஆனந்த்
இதன்பிறகு வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடியை காவலாளி அல்ல கோமாளி என்றார். இதனால் பாஜக தொண்டர்கள் கொதிப்படைந்தாலும், பொதுப்படையாக உதயநிதி சொல்வதை ஏற்க முடியவில்லை. இதுபோலவே தமிழக முதல்வர் எடப்பாடி, கவுன்சிலர் ஆக கூட தகுதியில்லாதவர் என்கிறார்.

சூட்கேஸ் மணி
நமக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ.. மோடி இந்த நாட்டின் பிரதமர்! எடப்பாடி இந்த மாநிலத்தின் முதல்வர்!! அந்தந்த பதவிக்கான மரியாதையாவது நாம் தர வேண்டியது அவசியம் என்பதைதான் உதயநிதி உணர வேண்டியது கட்டாயமாகிறது. இதேபோலதான் தருமபுரிக்கு சென்ற உதயநிதி, "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போன எலக்ஷனில் சொன்னார். ஆனா இப்போ பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்றுதான் தெரிகிறது" என்று விமர்சித்தார்.

அன்புமணி ராமதாஸ்
தருமபுரி தொகுதியை பொறுத்தவரை அடிப்படை தேவைகளை சரிசெய்து மக்களின் அதிருப்தியை சம்பாதிக்காமல் தொகுதியை தன் பக்கம் தக்க வைத்து கொண்டுள்ளார் அன்புமணி. அது மட்டுமில்லாமல் அன்று ஜெயலலிதாவின் வியூகத்தையே சுக்குநூறாக்கி ஜெயித்து காட்டிய அன்புமணியின் வலிமையை பற்றி அறியாமல் இன்று சகட்டு மேனிக்கு உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

அரசியல் மாண்பு
பொதுவாக ஒருவருடய செயல்பாடுகளையோ அவருடைய திட்டங்களையோ விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையிலோ, அல்லது கடிவாளம் இடாமல் பேசுவதோ அரசியல் மாண்பு இல்லை... பல தியாகங்களுக்கு நடுவில் திமுகவை போற்றி பாதுகாத்து வளர்த்து வந்த கருணாநிதிக்கும் இழுக்கை ஏற்படுத்திவிடும். தன்னை தேடி வீட்டுக்கு வருபவர்கள் வயதில் எவ்வளவு சின்னவர்களாக இருந்தாலும் எழுந்து நின்று வரவேற்கும் பண்பாளர் கருணாநிதி!

கைதட்டல் காரணமா?
இதை உதயநிதி கட்டாயம் உணர வேண்டும். அது மட்டுமல்ல.. உதயநிதி விமர்சிப்பவர்கள் எல்லாருமே வயதில் அவரை விட பெரியவர்கள்.. அனுபவத்தில் மூத்தவர்கள்.. கைதட்டல் கிடைப்பதற்காக தரம் தாழ்ந்து பேசிவிடுவதை யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது!

பாதிப்பு வந்துடும்
"தலைவர் ஸ்டாலின் கிட்ட எப்பவுமே ஒரு நாகரீகம் இருக்கும். யாரையுமே ரொம்ப மோசமா பேச மாட்டார். ஆனால் அரசியலுக்கு இவர் புதுசு.. எங்கே எப்படி பேசணும்னு தெரியல.. இப்படியே பேசிட்டு இருந்தால் அது எலக்ஷன்ல பாதிச்சுடும். கட்சிக்கும் கெட்ட பெயர் வந்துடும். இதுதான் எங்களுக்கு கவலையாக இருக்கு" என்கின்றனர் திமுகவினரே!
யாராவது உதயநிதிக்கு அட்வைஸ் தருவார்களா?












Click it and Unblock the Notifications