அதிமுகவுக்கு அண்ணாமலை தலைமை ஏற்கிறாரா? செம டென்ஷனான கே.பி. முனுசாமி!
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட போகிறாரா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு கே பி முனுசாமி டென்ஷன் ஆகி பதில் அளித்தார். என் தலைவனை பார்க்கிற கண்கள்.. அந்த பார்வை.. எந்த சூழலிலும் இன்னொருத்தரை பார்க்காது. அதுதான் அதிமுக என்றும், அண்ணாமலையை விளம்பரப்படுத்த இப்படி ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் தலைமைக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விஜய்யின் தவெகவில் சேர்ந்து வருகின்றனர். இந்த சூழலில் தான் அண்ணாமலையும் பாஜகவில் இருந்து விலகி, வீ தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்.

எந்த சூழலிலும் இன்னொருத்தரை பார்க்காது
அதிமுகவில் தலைமைக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாகவும், இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு அண்ணாமலையை நியமிக்கலாம் என சில நிர்வாகிகள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் கே பி முனுசாமி இது பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- தவெக ஆட்சியை தொடர்ந்து 5 ஆண்டுகள் நடத்த முடியுமா? என்பது விஜய்யின் நடவடிக்கையால் கேள்விக்குறியாகிக்கொண்டு இருக்கிறது” என்றார்.
அப்போது, அண்ணாமலையை அதிமுகவில் பொதுச்செயலாளராக கொண்டு வர வேண்டும் என்று சிலர் பேசியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கேபி முனுசாமி கூறியதாவது:- இப்போ வேண்டும் என்றே நீங்கள்தான் கேட்கிறீர்கள். ஆனாலும் அதற்கு நான் பதில் சொல்கிறேன். உண்மையான அதிமுக தொண்டன்.. நான் சொல்வது விஜயபாஸ்கர் மாதிரியான ஆட்கள் இல்லை. ஓடுகாலி மாதிரி சிலர் போகிறார்களே அவர்கள் மாதிரி ஆள் இல்லை. உண்மையான அதிமுக தொண்டர்கள்.. என் தலைவனை பார்க்கிற கண்கள்.. அந்த பார்வை எந்த சூழலிலும் இன்னொருத்தரை பார்க்காது. அதுதான் அதிமுக.
விளம்பரம் தேடி கொடுக்குறீங்க
இது நீங்களே செட்டப் செய்து இப்படி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி அண்ணாமலைக்கு ஒரு விளம்பரத்தை தேடிக்கொடுக்குறீங்க.. கேள்விகள் கேட்கும் போது நியாயமான கேள்வி கேட்க வேண்டும். 54 வருடமாக இருக்கும் ஒரு கட்சியை நேற்று வந்த ஒரு நபருக்காக நாங்கள் தீர்மானம் போடுகிறோம் என்று கேள்வி கேட்கிறீர்களே.. உங்களுக்கு அது தர்மமாக உள்ளதா?" என்று காட்டமாக பேசினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கேபி முனுசாமி கூறியதாவது:- அதைத்தான் நான் இப்போது பேசினேன். எங்கள் அண்ணா தொழிற்சங்க கூட்டத்தில் பேசினேன். அவருடைய உழைப்பு.. தியாகம், தொண்டர்களிடத்தில் கொண்டு இருக்கிற ஈடுபாடு.. இதில் வேறு யாராவது இருக்கிறார்களா என்றால் இல்லை.
ரசிகர் மன்ற கட்சி
எனவே, அவர்கள் (எடப்பாடி மீது அதிருப்தி தெரிவிப்பவர்கள்) காழ்ப்புணர்ச்சி காரணமாக போகிறார்கள். பொதுச்செயலாளர் மீது அவர்களுக்கு கோபம் இல்லை. புதிய ஆட்சி அமைந்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. திமுகவில் போய் நுழைய முடியாது. அமைச்சர் பதவி கிடைக்காது. ஆனால், இப்போ வந்துள்ள கட்சி தொண்டர்கள் இல்லாத கட்சி. ரசிகர் மன்ற கட்சி..
அதனால், நாம போய் அதை ஆக்கிரமித்துவிடலாம். நாம போய் பதவியேற்று விடலாம் என்று நப்பாசையில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நப்பாசையில் போயிருக்கிற இவர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் இன்னும் அவரது முகத்தையே காட்டவில்லையே" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications