எஸ்பி வேலுமணி காட்டும் தயக்கம்.. அண்ணாமலையால் அதிமுகவுக்கு வரும் பிரம்மாண்ட சிக்கல்!
கோவை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் அதிமுகவில் இருந்து பலரும் தவெக பக்கம் நகர்ந்து வரும் சூழலில், அண்ணாமலை கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். இதனால் அண்ணாமலை கட்சித் தொடங்கினால், அதிமுகவில் உள்ள கொங்கு மண்டல நிர்வாகிகள் அவர் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், சுமார் 25 எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி பக்கம் இணைந்தாலும், அதிமுகவில் இன்னும் அதிருப்தி நீடித்து வருகிறது. ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக பக்கம் சென்றுவிட்டனர்.

முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சம்பத், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், வைகைச் செல்வன் உள்ளிட்ட பலரும் தவெக பக்கம் சென்றுவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக சிவி சண்முகத்துடன் தவெக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதவியை ஏற்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் பலரும் தவெக பக்கம் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எஸ்பி வேலுமணி தரப்பையும் தவெகவினர் அணுகி இருக்கின்றனர்.
எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தவெகவை நோக்கி நகரும் பட்சத்தில் அதிமுகவின் கொங்கு மண்டல கட்டமைப்பு மொத்தமாக காலியாகும். இருப்பினும் எஸ்பி வேலுமணி தரப்பு தவெக பக்கம் செல்வதில் தயக்கம் காட்டி வருகிறது. கொங்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு மிகப்பெரிய ஆதரவு அலை இருப்பதால், அவர் பக்கம் செல்லலாமா என்று எஸ்பி வேலுமணி ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அவருக்கு இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகளும் அண்ணாமலை பக்கம் செல்ல அறிவுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அவரின் முதல் மாநாடு விரைவில் நடக்கவுள்ளது. அதன் பின் அதிகாரப்பூர்வமாக கட்சி அறிவிக்கப்பட்டு அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அவர் பக்கம் அதிமுகவினர் பலரும் செல்வார்கள் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications