குதிரை பேரம் உருவாக்கியதே திமுக தான்.. செங்கோட்டையன் சொன்ன பிளாஷ்பேக்
ஈரோடு: தேர்தல் முடிவு தமிழ்நாடு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இடைத்தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, தங்களின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க தவெக திட்டமிட்டுள்ளது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் குதிரை பேரம் என்றால் என்ன என தெரியவில்லை. குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுகதான் என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுக தான். அதிமுகவில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து திமுகவில் இணைத்து, தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வைத்தார். எங்களை குதிரை பேரம் என்று சொல்லும் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனும் அதைத்தான் செய்தார். அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, திமுகவில் இணைந்து போட்டியிட்டார்.

குதிரை பேரம் உருவாக்கியது யார்
குதிரை பேரத்தை முதலில் உருவாக்கியதே திமுக தான். எங்களுக்கு அந்த நிலை தேவையில்லை. குதிரை பேரம் என்பது என்ன என்று எனக்கு தெரியவில்லை. எல்லோரும் குதிரை பேரம் என்கிறார்கள். புரியாத ஒன்றை புரிவது போல எல்லோரும் குதிரை பேரம் என்று பேசி கொண்டிருக்கிறார்கள். அதற்கு வேறு பொருள் தமிழகத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம். எப்படி அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று சி.பிளஸில் தேடி வருகிறோம். பதில் கிடைத்தவுடன் சொல்கிறோம்.
இடைத்தேர்தலுக்கு பேரம் பேச வேண்டிய நிலை தவெகவுக்கு இல்லை. போடப்பட்டுள்ள அமைச்சர்கள், தவெகவில் 90 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளனர். குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. வலிமையான ஆட்சி உள்ளது. எங்களுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவும் வலுவாக உள்ளது. 96 பேரை வைத்து கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுக, கூட்டணி கட்சி யாருக்கும் மந்திரி சபையில் இடம் கொடுக்கவில்லை.
கணக்கில் கூடாது பிணக்கு
அதைவிட கூடுதல் இடம் வைத்துள்ள தவெக ஆட்சியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் எல்லோரையும் மந்திரி சபையில் இடம் பெற வைத்துள்ளோம். கம்யுனிஸ்ட்கள் எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம். வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்றனர். குதிரை பேரத்துக்கு வேலையில்லை. வலிமையான, நேர்மையான, மக்கள் விரும்பும் தவெக ஆட்சிக்கு குதிரை பேரம் தேவையில்லை. மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுகவுக்கு தான் அது தேவை. தவெகவுக்கு அது தேவையில்லை.
ஆளுநர் குறித்து சட்ட அமைச்சர் பதில் கூறிவிட்டார். ஒவ்வொரு அமைச்சரும் அதைப்பற்றி பேச வேண்டியதில்லை. சட்ட அமைச்சர் அதற்கான பதிலை சொல்லிவிட்டார். தோழமை கட்சிகளும் பதில் சொல்லிவிட்டனர். அதுதான் எங்கள் மொத்த பதில். கரூர் சம்பவத்தில் கணக்கு தீர்ப்பது என்பது, பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதை தான் அமைச்சர் ஆதவ் சொன்னார். அந்த கணக்கில் பிணக்கு போட கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications