புழல் சிறைக்குள் வைத்து பிரபல ரவுடி வெள்ளைக்காளியை தீர்த்துக்கட்ட முயற்சி.. 1 கோடி வரை பேரம்?
சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சிறையில் இருந்தவர்கள் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளைக்காளி மீது, சிறைக்குள் இருந்த சக கைதிகள் திடீரென கொலை முயற்சி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடி வெள்ளைக்காளி தண்டனை அனுபவித்து வரும் அதே புழல் சிறையில் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனும் அடைக்கப்பட்டுள்ளார். ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்டு ரூ.25 லட்சம் தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன் ரவுடியை கொல்ல திட்டமிட்ட 4 பேரை பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்ல திட்டம் தீட்டிய ரவுடி லாலி மணிகண்டன் சேலம் சிறைக்கும், மற்ற 3 பேர் கடலூர் சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரையில் வீ.கே.குருசாமி தரப்புக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் இடையே உள்ள மோதல் போக்கால் 21 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த 'கிளாமர்' காளி என்ற காளீஸ்வரன் (32) கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீசார் வெள்ளைக்காளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றனர். பல்வேறு காரணங்களுக்காக வெள்ளைக்காளி புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications