மன்னிப்பு கேட்க முடியாது.. குஷ்பு பிடிவாதம்.. குஷ்பு படத்தை செருப்பால் அடித்து பெண்கள் கொந்தளிப்பு!
சென்னை: 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குஷ்பு தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், திமுக மகளிர் அணியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார். பலராலும் போற்றப்படும் திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இவ்வாறு விமர்சித்து பேசிய குஷ்புவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திமுகவினர் நடிகை குஷ்புவை சரமாரியாக தாக்கி பேசி வருகின்றனர். குஷ்புவும் அவர்களுக்கு சளைக்காமல் பதில் கூறி தனது கருத்தை நியாயப்படுத்த முயற்சித்து வருகிறார். மேலும், தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குஷ்பு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், "உண்மை எப்படி பயத்தை கிளப்பி விடும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன். திமுகவில் இருக்கிற அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை குஷ்பு பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் பேசும் போதோ ஒரு ஐடி விங், வார் ரூம் வைத்துக்கொண்டு பேசுவது கிடையாது. நேருக்கு நேராக தைரியமாக பேசுவேன். அதைத்தான் இப்போது செய்கிறேன்.
பூச்சாண்டி வேலை எல்லாம் என் கிட்ட காட்டாதீங்க. நான் தவறு செய்தால் சிறு குழந்தையாக இருந்தாலும் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். நான் பயந்து ஓடிட மாட்டேன். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். பெண்களுக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார் குஷ்பு.
மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக.வைச் சேர்ந்த குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும், குஷ்பு படத்தை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, குஷ்புவின் படம் பொறிக்கப்பட்ட பேனரை செருப்பால் அடித்த அவர்கள், குஷ்புவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
குஷ்பு பேசிய வீடியோவை பொதுமக்களுக்கு போட்டுக் காட்டி, அவர்களின் கருத்துகளை பெற்று அதனை பதிவிட்டும் தங்களது எதிர்ப்பை திமுக மகளிரணியினர் பதிவு செய்து வருகின்றனர். பெண்கள் பலரும் குஷ்புக்கு எதிரான கருத்தை தெரிவித்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications