திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு.. மாற்று தேதி விரைவில்.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. திமுகவை பொறுத்தவரை, அடுத்தடுத்து மாநாடு, பொதுக்கூட்டம், ஆலோசனை கூட்டம் என பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

திமுக இளைஞரணியில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2-வது மாநாட்டை நடத்த தி.மு.க இளைஞரணி முடிவு செய்துள்ளது.
தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான தி.மு.க இளைஞரணி மாநாடு ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், திமுக இளைஞர் அணியின் மாவட்ட- மாநகர- மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை நடைபெற இருந்த திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 21/12/2025 மாலை 6 மணியளவில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ள நிலையில், கழக இளைஞர் அணியின் மாவட்ட- மாநகர- மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப் படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications