விஜய் விஷயத்தில் விட்டு பிடிக்கும் திமுக.. பெரியதாக அலட்டிக்கொள்ளாததற்கு காரணம் இதுதான்!
சென்னை: என்ன மாதிரியான கட்சி இது? ஏன் இன்னும் விஜய் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றெல்லாம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது. இருப்பினும் விஜய் விஷயத்தில் இன்னும் பெரிய நடவடிக்கைக்குள் திமுக இறங்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் இருக்கிறது.
கரூர் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் என்னைக்கா இருந்தாலும் ஆபத்துதான் என்று பலரும் எச்சரித்து வந்த நிலையில், கரூரில் அசம்பாவிதம் நடந்துவிட்டது.

விஜய் பேருந்து பறிமுதல்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வேதனை அளிக்கின்றன. இந்த வழக்கில் இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது? அனைத்தையும் தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது. விஜய் பயணம் செய்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? வழக்கு பதிவு செய்ய என்ன தடை? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ?
தலைமைப் பண்பே இல்லாத கட்சி
பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால், காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? எஃப் ஐ ஆர் பதிவு செய்து, விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்ணை மூடி கொண்டிருக்காது. கரூரில் நடந்துள்ள சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என ஏராளமானவர்கள் உயிரிழந்த நிலையில், கட்சி தொண்டர்களையும் ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு தவெக தலைவர் விஜய், உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடி உள்ளனர். அவர்களுக்கு தலைமை பண்பு இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்காது கண்டனத்திற்குரியது" என்று நீதிமன்றம் சரமாரியாக விமர்சித்திருந்தது.
திமுகவின் கவனம்
ஆனாலும் இதுவரை விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மட்டுமல்லாது தவெக பொதுச்செயளாலரான புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜீனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்படாமல் இருக்கின்றனர். ஏன் விஜய் கைது செய்யப்படவில்லை என்று திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் திமுக மிகவும் கவனமாக இருக்கிறது. சம்பவம் நடந்த அன்று சோஷியல் மீடீயாக்களில் எழுந்த பேச்சுகளை கட்சி மேலிடம் கவனித்தது.
41 பேர் உயிரிழந்தபோதும், விஜய் மீதான விமர்சனங்கள் கூர்மையாக இல்லை. சதி நடந்தது, திமுகக்காரர்கள் உள்ளே புகுந்துவிட்டார்கள் என்றெல்லாம் தவெகவினர் பேசினார்கள். ஆனால் அதைத்தாண்டி விஜய் ரசிகர்களும் இதையே பேசியதுதான் திமுகவை மேலும் அதிர்ச்சியில் தள்ளியது. எனவே எடுத்த எடுப்பிலேயே விஜய்யை கைது செய்துவிட்டால் அது பேக்ஃபயராக ஆகிவிடும் என்று கட்சி நிதானித்து செல்கிறது.
பொறுமை காக்கும் தலைமை
இந்த பொறுமைக்கு மற்றொரு வகையில் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் காரணமாக இருக்கிறார்கள். விஜய் ஏன் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை? ஏனெனில் அங்கு போனால் விஜய்யை பார்க்க கூட்டம் கூடும். அங்கும் விஜய்யை அவரது தொண்டர்கள் கொண்டாடுவார்கள். துக்க வீட்டில் கூட கொண்டாட்ட மனநிலையுடன் தொண்டர்கள் நுழைவார்கள். இப்படிப்பட்ட கூட்டமே விஜய்க்கு நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே நாமாக சென்று எதுவும் செய்ய வேண்டாம் என, திமுக பொறுமையாக இருக்கிறது.
எப்படிப்பட்ட கட்சி இது?
விஜய் சந்திக்கவில்லை என்றால் என்ன? கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்திருக்கலாம். அனால், கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், அவர் மூலமாக புஸ்ஸி ஆனந்தும் சொல்லாமல் மாவட்ட செயலாளர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். அரசியலில் ஆத்திச்சூடியே சுயசிந்தனைதான். ஆனால் தவெகவில் அது கிடையாது என்று ஏற்கெனவே அக்கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் கூறுகிறார்கள். எனவே இப்படியான கூட்டத்தை மெனக்கெட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்களே தங்கள் கட்சியின் பின்னடைவுக்கு காரணமாகிவிடுவார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இப்படியான காரணங்களால்தான் திமுக இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலை மட்டும் பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications