மெகா வெற்றி.. 50 நாளில் இலக்கை தாண்டி கையெழுத்துகளைப் பெற்ற நீட் விலக்கு இயக்கம்.. உதயநிதி உற்சாகம்!
சென்னை: நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தில் 50 நாட்களில் 72 லட்சம் பேர் கையெழுத்து இட்டுள்ளதாகவும், நீட் எதிர்ப்பு போரில் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. நீட் ஒழிப்புக்கு எதிராக 50 நாட்களில் 50 லட்சம் கையொப்பங்களைப் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 50 நாட்களில் தற்போது சுமார் 72 லட்சம் பேர் கையெழுத்து இட்டுள்ளதாகவும், சேலம் மாநாட்டில் அவற்றை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த "நீட் விலக்கு நம் இலக்கு" கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. '50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்' என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது. இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த கையெழுத்துகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம். இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள் - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் - திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications