ஆதார் அட்டை + வங்கி கணக்கு.. இனி "இவங்களுக்கும்" கட்டாயம்.. வீட்டு வாசலிலேயே "சான்றிதழ்": தபால் துறை
சென்னை: ஓய்வூதியர்களுக்கு வீட்டு வாசலிலேயே உயிர்வாழ் சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தபால் துறை செய்துள்ளது.. இதுகுறித்து கூடுதல் அறிவிப்பு தபால்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுவதற்காக வருடந்தோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
எனவே, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயிர்வாழ் சான்றிதழ்: காரணம், நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் நிறைய சிரமங்களை மேற்கொள்வதால், இதனை தவிர்ப்பதற்காகவே, தபால் துறையின் மூலம் சமீபத்தில் இப்படியொரு வசதி கொண்டுவரப்பட்டுள்ளது..
அதன்படி தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
பதிவிறக்கம்: அதேபோல, www.ccc.cept.in என்ற இணையத்தள முகவரி மூலம் அல்லது postinfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவை தொடர்பான கோரிக்கையை வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்.
"இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி" திட்டத்தின்கீழ ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளதாக முதன்மை தபால் துறை தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்குகள்: இதுகுறித்து அவர் மேலும் சொல்லும்போது, "ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்தினால் போதும்.
அதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தில் தமிழ் வழியில் 3 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத்தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும்.
தபால் நிலையங்கள்: 5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தபால் துறை கணக்கும், 6 முதல் பிளஸ்-2 வரை படிப்பவர்களுக்கு தபால் துறை வங்கி கணக்கும் தொடங்க தமிழக பள்ளிக்கல்வி துறையுடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், பள்ளிகளிலோ அல்லது தபால் நிலையங்களில் கணக்குகளை தொடங்கலாம்" என்று முதன்மை தபால் துறை தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களுக்கு இதுகுறித்த சந்தேகங்கள் இருந்தால், அருகிலிருக்கும் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications