ஒவ்வொன்றும் ஒரு நகராட்சிக்கு சமம்.. சென்னை மாநகராட்சி 300 வார்டுகளாக எப்படி உயர்த்தப்படும்?
சென்னை: சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டும் ஒரு நகராட்சிக்கு சமம், அந்த அளவிற்கு மக்கள் தொகை இருக்கிறது. சென்னை மாநகராட்சி வார்டுகள் தற்போது 200 ஆக உள்ள நிலையில், விரைவில் 300 ஆக உயர்த்தப்பட உள்ளது. எப்படி 300 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
வெள்ளையர்கள் உருவாக்கிய கிண்டி முதல் பாரிமுனை வரையிலான சென்னை மாநகராட்சி, இன்று நிஜமாக சொல்வதென்றால் தெற்கே செங்கல்பட்டு வரை நீண்டு விட்டது. மேற்கே திருவள்ளுர் வரையிலும், தென்மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடக்கே பொன்னேரி வரையிலும் நீண்டுவிட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி என்பது அந்த அளவிற்கு நீட்டிக்கப்படவில்லை.. சென்னை மாநகராட்சி என்பது விமான நிலையம் முதல் வடக்கே எண்ணூர் வரையிலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் செம்மஞ்சேரி வரையிலும், நடுவில் மடிப்பாக்கம் வரையிலும் இருக்கிறது. தெற்கே அம்பத்தூர் வரையிலும் சென்னை மாநகராட்சி நீண்டுள்ளது.

உண்மையில் சென்னை மாநகராட்சி என்பது 1688 முதல் உருவாக்கப்பட்டது. ஒரு மேயர், 12 மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் 60 முதல் 100 பேர்கள் வரை கொண்ட பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1919-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு ஒரு குழுவும், அதற்கு தலைவர் ஒருவரும், 30 மாமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள். 1936-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக் குழுவின் எண்ணிக்கை 65ஆக உயர்த்தப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது 200 ஆக உள்ளது. 1996ல் மேயரை மக்கள் தேர்வு செய்தார்கள் . தற்போது மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்கிறார்கள்.
கடைசியாக 2022-ஆம் ஆண்டில் சென்ன மாநகராட்சியின் 200 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 179 வார்டுகளையும், அதிமுக 15 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அமமுக தலா 1 வார்டையும் கைப்பற்றின. சுயேச்சைகள் 4 வார்டுகளை கைப்பற்றி உள்ளார்கள். அதே ஆண்டு நடைபெற்ற மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், சென்னை மாநகராட்சி மேயராக திமுகவின் ஆர். பிரியாவும், துணை மேயராக மு. முகேஷ்குமாரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்களாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்வதற்கும் முன், 174 சதுர கிலோமீட்டர பரப்பளவு கொண்டிருந்தது. ஆனால் சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 சதுர கிலோ மீட்டராக உயர்ந்தது. கடைசியாக சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஆலந்தூர், அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம், மதுரவாயல், மணலி, திருவொற்றியூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய நகராட்சிகள் இணைக்கப்பட்டன.
இதேபோல் சின்னசேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. அதேபோல் இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், வைக்காடு, மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, மஞ்சம்பாக்கம், கொசப்பூர், நொளம்பூர், நெற்குன்றம்,ராமாபுரம், முகலிவாக்கம், மௌலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்-துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, செம்மண்சேரி, உத்தண்டி போன்ற ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியுடன் கடைசியாக இணைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் எல்லா வார்டுகளுமே கிட்டத்தட்ட ஒரு நகராட்சிக்கு சமமான மக்கள் தொகை இருக்கிறது. அதுமட்டுமின்றி சில பகுதிகளில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளே வரும் அளவிற்கு மக்கள் தொகை இருக்கிறது. சோழிங்கநல்லூர் மண்டலத்தை மட்டுமே பிரித்து தனியாக மாநகராட்சியாக அறிவிக்கலாம். அந்த அளவிற்கு மக்கள் தொகை இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி வார்டுகள் உயர்த்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுவரை சென்னை மாநகரில் மொத்தம் மக்கள் தொகை 89 லட்சமாக இருக்கிறது. இதில் 200 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாகவும் மக்கள் வசிக்கிறார்கள்.
ஆகவே சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் தற்போது இருக்கும் 200வார்டுகள் 300வார்டுகளாக ஆக உயர வாய்ப்பு இருக்கிறது என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு சொன்னபடியே பல வார்டுகள் நகராட்சிக்கு சமமான மக்கள் தொகை இருப்பதால் இரண்டு வார்டுகளாக பிரிக்கப்படக்கூடும். ஆலந்தூர், அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம், மதுரவாயல், மணலி, திருவொற்றியூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், வளசரவாக்கம், புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் உள்பட மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் வார்டுகள் எண்ணிக்கை அப்படியே டபுள் ஆகும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ. 45 லட்சமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வருகிறது.
எம்எல்ஏக்களுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு என்பது சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதியாக உள்ளது. சென்னை மாநகராட்சி வார்டுகள் 300 வார்டுகளாக அதிகரிக்கப்படும் போது, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு கூடுதலாக 50 லட்சம் கிடைக்கும், அதாவது ஒரு கோடி அளவிற்கு ஆண்டுக்கு கூடுதல் தொகை கிடைக்கும். சென்னைக்கு மொத்தம் வார்டு நிதியாக மட்டும் 150 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications