பாஸ்பரஸ் பூசிய அட்டையில் மனித எலும்புகளின் நிழல்கள்! எக்ஸ் ரேவை ராண்ட்ஜன் கண்டுபிடித்தது எப்படி?
சென்னை: எக்ஸ் ரே கதிர்கள் என்றால் என்ன, அவை எப்படி கண்டறியப்பட்டது என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனையின் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கீழே விழுந்து கை காலில் அடிபட்டால் அனைவரும் கூறுவது. உடனே ஒரு எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்துருங்க.. எலும்பு ஏதும் உடஞ்சுருக்கப்போகுது என்பார்கள். இன்று கொரோனா பெருந்தொற்று பரவி நம்மை அச்சுறுத்தும் இந்த நாளிலும் இந்த எக்ஸ்ரேதான் துல்லியமாக சிடி ஸ்கேன் வழியாக நமக்கு நுரையீரலில் தொற்றின் நிலவரத்தை காண்பிக்கின்றன.
கேன்சர் பாதித்த நோயாளிகளுக்கு ரேடியோதெரபி வழங்க எக்ஸ்ரேவின் உதவி நாடப்படுகிறது. உடலை அறுவை சிகிச்சை செய்து கீறாமல் உள்ளே இருப்பதை காண முடியும் என்பதே கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரும் மெடிக்கல் மிராக்கிள் ஆகும். எக்ஸ் ரே தான் அந்த கண்டுபிடிப்பு. மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் அழகிய விபத்தாகவே நிகழ்ந்துள்ளன. அந்த வழக்கத்தை எக்ஸ்ரே கண்டுபிடிப்பும் மாற்றவில்லை. எக்ஸ் ரே ( இனம் புரியாத ஒளி அலைகள் ) எனும் இந்த மின்காந்த ஒளி அலைகளை வில்லியம் ராண்ட்ஜன் எனும் ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த இயற்பியலாளர் கண்டுபிடித்தார்.

க்ரூக்ஸ் விளக்கு
க்ரூக்ஸ் விளக்கு என்பது அக்கால இயற்பியலாளர்களிடையே ரொம்ப ஃபேமஸாக இருந்தது. ஒருபக்கம் நெகடிவ் சார்ஜ் உள்ள கேதோடு. மற்றொரு பக்கம் பாசிடிவ் சார்ஜ் உள்ள ஆனோடு. இவற்றை காற்று இல்லாத ஒரு கண்ணாடி குடுவைக்குள் வைத்து கேதோடு முனையில் இருந்து அதிக அளவில் மின்சாரத்தை பாய்ச்சும் போது ஆனோடு பகுதியில் வெளிச்சம் ஏற்படுவதையும் ஆனோடுக்கும் விளக்கின் கண்ணாடிக்கும் இடையில் பச்சை மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் ஏற்படுவதையும் கண்டு அக்கால இயற்பியலாளர்கள் வாயடைத்துப்போயினர் க்ரூக்ஸ் விளக்கில் பச்சை மஞ்சள் நிறத்தில் ஏற்படும் வெளிச்சம் எதனால் ஏற்படுகிறது ?

ராண்ட்ஜன் ஆய்வு
எதனால் ஆனோடின் பின்புறம் விளக்கின் கண்ணாடியில் அதன் நிழல் விழுகிறது? இதுகுறித்து ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டே இருந்தனர். ராண்ட்ஜனும் இதுகுறித்த ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தார். ஒரு விசயத்தை மனதில் கொண்டு செயலில் உழைத்தால் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் தானே. அது போல் அந்த நாளும் வந்தது. 1895ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி தனது ஆய்வகத்தில் இது குறித்த ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கும் போது க்ரூக்ஸ் விளக்கில் இருந்து வந்த கண்ணுக்குப் புலப்படாத அந்த ஒளிபட்டு பல அடிதூரம் தள்ளி வைக்கப்பட்டிருந்த பாஸ்பரஸ் பூசிய அட்டை ஒளிர்ந்தது.

க்ரூக்ஸ் விளக்கு
அந்த க்ரூக்ஸ் விளக்கைச்சுற்றி கருப்பு காகிதம் வைத்து மறைத்தார். அப்போதும் அந்த அட்டை ஒளிர்ந்தது. அந்த அட்டையை மரத்தகடால் மறைத்துப் பார்த்தார். துணி கொண்டு மூடிப் பார்த்தார். எதிலும் அந்த அட்டை ஒளிர்வதை தடுக்க முடியவில்லை. தனது உடலில் உள்ள தசைகளை ஊடுருவிக் கொண்டு அந்த மின் காந்த ஒளி அலைகள் சென்ற அந்த அட்டையில் எலும்புகள் மட்டும் நிழல்களை ஏற்படுத்தின. மனித சமுதாயத்துக்குத் தேவையான உகந்த கண்டுபிடிப்பை கண்டறிந்த அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கண்டுபிடிப்பு
இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை அவர் கோரவில்லை. எனவே பல அறிவியல் அறிஞர்களும் இலவசமாக இது குறித்து இன்னும் பல ஆய்வுகள் மேற்கொண்டனர். உடனே மருத்துவத் துறையில் புழக்கத்துக்கு வந்தது. முக்கியமாக போர்க்களத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகள், உடலுக்குள் தோட்டா இருக்கிறதா, இல்லையா என்பதை அறிவதற்கு உபயோகமாக இருந்தது. இன்று எக்ஸ்ரே, சிடி ஸ்கேன்,
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ என்று அந்தத் துறை முன்னேறி நோய் அறிவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

எக்ஸ்ரேக்கள்
ரேடியாலஜிஸ்ட்கள், ரேடியோகிராஃபர்கள், எக்ஸ்ரே டெக்னிசியன்கள், சிடி ஸ்கேன் / எம் ஆர் ஐ டெக்னீஷியன்கள், எக்கோ டெக்னீசியன்கள் இன்னும் இத்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துகள். வில்லியம் ராண்ட்ஜன் தனது மனைவியின் கை வழி எக்ஸ்ரேக்களை பாய்ச்சி எடுத்த உலகின் முதல் எக்ஸ்ரே படத்தை தான் காண்கிறீர்கள். படத்தில் தெரிவது ராண்ட்ஜன் மனைவி அன்னா லுட்விகின் கை எலும்புகளும் இருவரது திருமண மோதிரமும். இவ்வாறு தனது பதிவில் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications