தேர்தலுக்கு பணமில்லையா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு, ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பணமில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதையடுத்து நிர்மலா சீதாராமனை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். தற்போது கர்நாடகா ராஜ்யசாபா எம்பியாக உள்ளார். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் தான் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன், ‛‛பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் என்னை போட்டியிட வைக்க விரும்பினார். நான் யோசித்து பார்த்துவிட்டு தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினேன். தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என தெரிவித்தேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்'' என தெரிவித்தார். .
அப்போது நாட்டின் நிதி அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று கூறுகிறீர்களே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், ‛‛நான் கையாளும் நிதி இந்தியாவுக்கானது. அது எனக்கானது இல்லை. என்னுடைய சம்பளம், வருமானம், சேமிப்பு மட்டுமே எனக்கானது. மற்றவை எல்லாம் இந்தியாவுக்கான நிதி'' என்றார். இதன்மூலம் நிர்மலா சீதாராமன் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என கூறியதை எதிர்க்கட்சி தலைவர்கள் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நிர்மலா சீதாராமன் தேர்தலில் நிற்க பணமில்லை என்றால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரிடம் அதிகப்பணம் இருக்கிறதா? தேர்தலில் நிற்க மக்கள் செல்வாக்கு போதும். பணம் என்பது தேவையில்லை. நிர்மலா சீதாராமன் தேர்தலில் நிற்கவும், மக்களை சந்திக்கவும் பயந்துபோய் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி எஸ்கேப் ஆகி உள்ளதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக இதுதான் தேசிய அளவில் பேசும் பொருளாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நிர்மலா சீதாராமன் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு அவர் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ராஜ்யசபா தேர்தலுக்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது சொத்து விபரங்களை அவர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து இருந்தார்.
அதில் நிர்மலா சீதாராமன் தனது ஆண்டு வருமானம் ரூ.8.08 லட்சம் என்ற அளவில் உள்ளது. கடனாக ரூ.30.44 லட்சம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.17 லட்சம் மதிப்பிலான நிலம், ரூ.18.39 லட்சம் மதிப்பிலான நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்தமாக ரூ.1.87 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ரூ.69.12 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications