தவெக மாநாடு.. விஜய்யின் லட்சிய அரசியல்.. ஆதவ் அர்ஜூனா என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிராவண்டியில் இன்று நடக்கவுள்ளது. மாநாடு வெற்றி பெற பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகை நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் விஜய்யின் அரசியல் நகர்வை உற்று நோக்கி வருகின்றனர். விஜய் கட்சியின் கொள்கை என்ன, அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு மேல் தான் மாநாட்டுக்கு தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முதலே தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்தின் அருகே குவியத் தொடங்கியதால் காலை 7 மணியளவில் மாநாடு நடக்கும் இடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், இன்று காலையிலேயே மாநாட்டு அரங்கம் பாதிக்கு மேல் நிரம்பிவிட்டது.
பல தொண்டர்கள் நேற்று இரவே விக்கிரவாண்டி வந்து தங்கியுள்ளனர். மாநாட்டு பணிகளை விஜய் நேற்று இரவு சென்று பார்வையிட்டார். முதல் மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 20,000 மின் விளக்குகள், 72 எல்இடி திரைகள், 3 கி.மீ பரப்பளவுக்கு தண்ணீர் தொட்டிகள், 200 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விஜய் ஏற்கனவே கடிதங்கள் மூலம் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புடன் வந்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டும், பொது மக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என கூறியிருந்தார். இந்நிலையில் மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வருகிறது.
விக்கிரவாண்டியில் வெயில் சுட்டெரித்து வருவதால் மாநாட்டுக்கு வந்த சிலர் ஆங்காங்கே மயக்கம் போட்டு வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாநாட்டில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர். முதலில் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என கூறியிருந்தனர். வெயிலின் தாக்கத்தால் தற்போது முன் கூட்டியே மாநாட்டை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மாநாடு மதியம் 3 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாட்டு வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அதன் தலைவர் சகோதரர் விஜய் தலைமையில் இன்று விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது.
மாநாட்டு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முகப்புகளில் தமிழ்நாடு அரசியலின் கொள்கை ஆசான் தந்தை பெரியார், இந்திய அரசியலின் அடையாளம் புரட்சியாளர் அம்பேத்கர், மக்கள் தலைவர் பெருந்தலைவர் காமராசர், அடிமைத்தனத்தை எதிர்த்த வீர பெண் களப்போராளிகள் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையையும், உறுதியான இலட்சிய அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை இதன் வழி அமைத்துக் கொள்வதன் மூலம் கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், அவரது இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications