அண்ணாமலை சசிகலாவை பார்த்ததும் சட்டென செய்த செயல்.. அதற்கு சசிகலா கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: இமாச்சலப்பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலியின் போது இறுக்கமான முகத்துடன் சசிகலா அமர்ந்திருந்த நிலையில், அவர் அருகே சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாலை சட்டென கையெடுத்து கும்பிட்டார். அதற்கு சசிகலா கொடுத்த ரியாக்ஷன் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான 45 வயதாகும் வெற்றி துரைசாமி, இமாசலபிரதேச மாநிலத்துக்கு அண்மையில் சுற்றுலா சென்றார். கடந்த பிப்ரவரி 4-ந் தேதி இவர் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. இதில் இமாச்சலைச் சேர்ந்த கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின்னர் சட்லஜ் நதியில் பாறைகளுக்கு அடியில் இருந்து கடந்த திங்கள் அன்று நீச்சல் வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் அஜித்குமார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் .
பின்னர் வெற்றியின் உடல், சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது அண்ணாமலை, சசிகலாவை பார்த்ததும், உடனே கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைத்தார். ஆனால் சசிகலா அதனை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அண்ணாமலை வணக்கம் வைத்தபடி இருந்தார். ஆனாலும் இறுக்கமாக காணப்பட்ட சசிகலா பதிலுக்கு வணக்கம் வைக்கவே இல்லை. எனினும் நீண்ட நேரத்திற்கு பிறகு கவனித்த சசிகலா தனது அருகில் உட்கார அண்ணாமலைக்கு இடம் கொடுத்தார். அண்ணாமலை அங்கு அமர்ந்திருந்தார். சசிகலா எதுவுமே பேசவில்லை..மிகவும் இறுக்கமான முகத்துடனே காணப்பட்டார்.

இதனிடையே நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அவரால் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் சார்பில் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.
தொடர்ந்து நேற்று இரவு 8.20 மணிக்கு மேல் சென்னை நந்தனத்தில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் இருந்து வெற்றியின் உடல் தகனம் செய்வதற்காக தியாகராயநகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயான பூமிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, வெற்றியின் உடலுக்கு சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் கொள்ளி வைத்தார்.
தகன சடங்குகள் முடிந்த பின்னர் வெளியே வந்த சைதை துரைசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், வெற்றி நம்மை விட்டு பிரிந்தது என்பது விதி. போகவே வேண்டாம் என்று நான் சொன்னேன். இந்த முறை இது கடைசி என்று சொல்லி சென்றான். அது அவனுக்கு கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒரு காலமும் நினைக்கவில்லை. இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசின் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளில் பணியாற்ற வாய்ப்பை பெற்ற மகன்களும், மகள்களும் இங்கு வந்திருக்கிறார்கள். எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்று பேசியதுடன் உடைந்து போனார். இதை பார்த்து பலரும் கலங்கி போனார்கள்.












Click it and Unblock the Notifications