பாம்புகளின் சட்டையை பார்த்துள்ளீர்களா? பாம்புகள் தோல் உரிக்காவிட்டால் என்னவாகும்?
சென்னை: பாம்புகள் தோலை உரிப்பதற்கு காரணம் என்ன? பாம்புகள் தோல் உரிக்கவில்லை என்றால் என்னவாகும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அது போல் இதன் சட்டையை கண்டாலும் "ஓ இந்த இடத்தில் பாம்பு நடமாட்டம் இருக்கிறது" என்ற அச்சம் எழும்.

இதுகுறித்து நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சாலை ஓரங்களின் வேலி ஓரங்களில் சுமார் 6 அடி நீளமான பாம்புச் சட்டைகள் கிடப்பதை பல நேரங்களில் நான் கையில் எடுத்தும் பார்த்திருக்கிறேன்.
பாம்புகள் போன்ற ஊர்வனவற்றில் இவ்விதமான சட்டை உரித்தல் என்பது பாம்பு சிறியனவாக இருக்கும் போது அடிக்கடியும் பெரியதாக வளர்ந்த நிலையில் மாதம் இரண்டொரு முறையோ நடைபெறுகிறது.
இனச்சேர்க்கை
இந்நிகழ்வு பெரும்பாலும் அவற்றின் இனச்சேர்க்கைக்கு முன்னரோ அல்லது முட்டையிடுதல்/குட்டி ஈனுதலுக்கு பின்னரோ நடைபெறும். இச்சமயம் பெரும்பாலும் இவை இரை ஏதும் எடுப்பதில்லை.
தோல் விரிவடையும்
பாம்புகள் வளரும்போது அவற்றின் தோல் விரிவடைவதற்கேற்ப அதன் மேற்புற தோலின் மெல்லிய படலம் விரிவடைவதில்லை. எனவே தோலுடன் உள்ள பிடிமானத்தை மேற்புற மெல்லிய படலம் இழக்கின்றது. அப்போது அவற்றின் கண்களுக்கு மேல் இருக்கும் இந்த மெல்லிய தோல் படலம் ஒளி கசியும் நிலையை (Translucent) அடைவதால் அச்சமயம் பாம்பினால் சரிவர பார்க்க முடியாது.
கடினமான மரப்பட்டை
அச்சமயம் இது தனது தலையை கடினமான மரப்பட்டை அல்லது கற்கள் மீது உரசித் தேய்த்து அந்த மேல்புற படலத்தை நீக்கும். அடுத்து செடிகொடிகளிடையே அங்குமிங்கும் சுழன்று தன் உடலின் மேற்புறத்தில் உள்ள மெல்லிய படலம் முழுவதையும் நீக்கும். இதுவே பாம்பு சட்டை உரித்தல் (Ecdysis) எனும் நிகழ்வாகும்!
ஒட்டுண்ணிகள் நிறைந்த மேற்புற படலம்
இவ்வாறு பாம்பு தனது சட்டை உரிப்பதால் பாம்பின் மீதுள்ள ஒட்டுண்ணிகள் நிறைந்த மேற்புற படலம் நீக்கம் செய்யப்பட்டு பாம்பு அதன் இயற்கையான நிறத்துடன் பளபளப்பான நிறத்தில் வழுவழுப்பாகவும் காட்சி அளிக்கும்!
பாம்பு சட்டை
உரிக்கப்பட்ட ஒரு பாம்புச் சட்டையில் உள்ள அடையாளங்களைப் பார்த்து அது எந்த வகையான பாம்பு என்பதை இலகுவாக அடையாளம் காண முடியும்! மேலும் அது அப்பகுதியில் எங்கோ தனது வசிப்பிடத்தைக் கொண்டுள்ளது எனவும் நிச்சயிக்க முடியும்!
பாம்புச் சட்டையில் விளையாட்டு
சிறுவயதில் நாங்கள் பாம்புச் சட்டையை கையில் எடுத்து கசக்கித் தேய்த்து ஒருவரையொருவர் அடித்து விளையாடியதுண்டு. 'அடி உரைக்கும்' (வலுவான நிலை) என்பது சிறுவர்களிடையே ஒரு நம்பிக்கை!
சீக்கிரம் சட்டை உரித்தால்
ஒரு பாம்பு மிகக் குறைந்த காலத்தில் அடுத்தடுத்து சட்டை உரித்தால் அந்தப் பாம்பு சீக்கிரம் வளர்ச்சி அடைந்து அது அளவில் பெரிதாகவும் நீளம் அதிகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதை காணமுடியும் ! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாம்பு நடமாட்டம்
ஒரு படத்தில் சிங்கமுத்து அயர்னிங் செய்யும் தொழிலாளியிடம் வந்து சட்டையை அவசரமாக அயர்ன் செய்து தாருங்கள் என கூறி பாம்பு சட்டையை கொடுப்பார். அது பொசுங்கிவிடும். என் நாகராஜனின் சட்டையை இப்படி செய்துட்டியே என சொல்வார். அந்த காட்சி காமெடியாக இருக்கும். அது போல் பாம்பின் தோல் வீட்டை சுற்றி எங்காவது இருந்தால் பாம்பு நடமாட்டம் இருக்கிறது என்பதை உணர்ந்து ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என்கிறார்கள். மேலும் பாம்பை கண்டதும் அதை அடிக்க பாய்வது கூடவே கூடாது, தீயணைப்புத் துறை அல்லது பாம்பு பிடிவீரர்களை அழைத்து பாம்பை பிடிக்க வேண்டும்.
இந்த பதிவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம், தன்னால் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications