2023ன் கடைசி கிரகணம்.. இந்தியாவில் தொடங்கிய சந்திரகிரகணம்.. சென்னையிலும் தெரியுதே
சென்னை: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் சென்னை உள்பட பல இடங்களில் தொடங்கி உள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மே 5 ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று வந்தது. அது பகுதி சந்திரகிரகணமாக இருந்தது. சந்திரகிரகணம் பவுர்மணி நாட்களிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாட்களிலும் நடைபெறும்.

ஆண்டுக்கு மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். அதில் இரு சந்திரகிரகணங்களும் இரு சூரிய கிரகணங்களும் நிகழும். அதில் கடைசி சந்திரகிரகணம் இன்று தொடங்கியது. இன்று நள்ளிரவில் சந்திரன் பூமியின் நிழல் பகுதிக்கு வருகிறது.
இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி இந்தியாவில் சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி நள்ளிரவு 1.06 மணி முதல் 2.22 மணி வரை இருக்கும். கிரகணம் 1 மணி 19 நிமிடங்கள் நிகழும் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வருவதுதான் சந்திரகிரகணம் ஆகும்.
அதன்படி இந்தியாவில் இன்று நள்ளிரவு 1.06 மணிக்கு சந்திரகிரகணம் தொடங்கியது. டெல்லி, உத்தரப்பிரதேசம், அஸாம், பெங்களூர், மும்பை, ஹைதராபாத், இந்தூர்,லக்னோ, பாட்னா, மத்திய பிரதேசம் ஆகிய ஊர்களில் சந்திரகிரகணம் தெரிய தொடங்கியது.
இதுபற்றி நேரு கோளரங்கத்தின் ஓய்வு பெற்ற மூத்த என்ஜினீயர் ஓபி குப்தா கூறுகையில், ‛‛2023ம் ஆண்டின் கடைசி கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் இரவு 11.31 மணிக்கு தொடங்கியது. பாதியளவினான கிரகணம் என்பது 1.05 மணிக்கு டெல்லியில் தெரியும். இது முழுமையாக 1.44 மணிக்கு பார்க்கலாம். இந்த சந்திரகிரகணம் அதிகாலை 3.56 மணிக்கு முடிவடையும். இது ஒரு பகுதி சந்திரகிரகணம் தான்'' என்றார்.
முன்னதாக சந்திர கிரகண நேரத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்தியா தவிர ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளிலும் இந்த கிரகணம் தெரியும். அமெரிக்காவில் சந்திரகிரகணம் தெரியாது. எனினும் தென் அமெரிக்காவின் பிரேசிலில் உள்ள சில பகுதிகளில் சந்திரகிரகணம் தெரியும்.












Click it and Unblock the Notifications