அமைச்சர்களிடம் "போராடி".. முதல்வரிடம் "வாதாடியே" மந்திரியான மன்னை ராஜா! டெல்டாவுக்கு பக்கா பொருத்தம்
சென்னை: தமிழநாடு அமைச்சரவையில் இணைந்துள்ள மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதல் முறையாக தமிழக கேபினெட்டில் இணைந்துள்ளார். அத்துடன் அவருக்கு முக்கிய துறையான தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் மூத்த நிர்வாகியும் பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மன்னார்குடி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் மன்னார்குடி எம்எல்ஏவாக 3 முறை வென்றுள்ளார்.
1976 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் ஆண்டு தளிக்கோட்டையில் பிறந்தார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை உளவியல் படித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர்கள் அணியின் முதல் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பதவியிலிருந்து விலகிய நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக ராஜா நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்பை ஏற்றது முதல் ஐடி விங் 2.0 என்ற பெயரில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளைச் செய்துள்ளார் ராஜா. தற்போது மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடி டிவிட்டர் ஸ்பேசில் தினம் ஒரு உரையாடல் என சமூகவலைதளங்களில் திமுகவின் பலத்தை வலுப்படுத்தினார். அத்துடன் முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளையொட்டி இரு முன்முயற்சிகளை ஐடி விங் சார்பாக தொடங்கினார். அவற்றில் ஒன்று ஒரு செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு அதில் முதல்வருக்கு வாழ்த்து சொல்வோர் சொல்லலாம் என்பதாகும்.
அது போல் செல்ஃபி வித் சிஎம் என்ற வெப்சைட்டை தொடங்கி அதில் விர்சுவல் டெக்னாலஜி மூலம் முதல்வருடன் செல்பி எடுப்பது உள்ளிட்டவை ஆகும். தனது தந்தையை போல் ராஜாவும் முதல்வரின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றவர். மின்னும் மன்னை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். நெற்களஞ்சியத்தில் இருக்கும் ராஜா, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது கழுத்தில் பச்சை நிறத்தில் துண்டு அணிந்து வந்தார். அது போல் பாரம்பரிய அரிசி ரகங்களை நினைவுப்படுத்தும் வகையிலும் அவற்றை ஊக்குவிக்கவும் சட்டசபைக்கு கொண்டு வந்திருந்தார். மேலும் முதல்வரின் மஞ்சபை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அந்த மஞ்சபையை முதுகில் மாட்டும் பை போல் மாடர்னாக மாற்றி சட்டசபைக்கு வந்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் என்ன சார் , பையில் ஸ்னாக்ஸா என கேட்டிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலினின் நட்பு வட்டாரத்தில் முதன்மையாக இருப்பவர். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதிலடியை கொடுப்பார். களச் செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு கோரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா பேசியிருந்தார். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ரூ 238 கேடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்றிருந்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியக் கூடியவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா பேசினார், அமைச்சரிடம் போராடினார், ஏன் என்னிடமே வாதாடினார். எனவே நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதியம் உயர்த்தப்படும் என்றார். டெல்டா மாவட்டத்திற்கு கிடைத்த முதல் அமைச்சர். இளம் தலைமுறையின் முகமாக ராஜா விளங்குவார். தனது தொகுதிக்கென்றால் எந்த தயக்கமும் இன்றி அமைச்சர்களிடம் போராடி, முதல்வரிடமே வாதாடியதால் இவர் அமைச்சரவைக்கு சரியாக இருப்பார் என்பதாலும் மக்களுக்கு சேவை செய்வார் என்பதாலும் இவருக்கு அமைச்சர் பதவியை முதல்வர் கொடுத்திருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications