வேலி தாண்டுடுச்சு வெள்ளாடு.. மோடி வர்ற நேரத்துல இது தேவையா? பாஜக எதிர்பார்க்கல.. கிலியில் எடப்பாடி?
சென்னை: அதிமுகவை ஓவர்டேக் செய்து கொண்டு, கூட்டணியை அமைத்து வருகிறது பாஜக.. அதிமுகவில் இதுவரை கூட்டணி முடிவாகாததற்கு என்ன காரணம்? யார் காரணம்?
எம்பி தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக மட்டுமே தற்சமயம் பலமான கூட்டணியை கட்டமைத்து வருகிறது.. காங்கிரசுக்கு ஒருசில இடங்களை கூடுதலாக ஒதுக்கி, கூட்டணியை நிறைவு செய்யும் என்று தெரிகிறது. அதற்குள் மக்கள் நீதி மய்யத்திலும், உடன்பாடு எட்டப்படும் என்று நம்பப்படுகிறது. எனவே, இப்போதைக்கு பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

திமுகவுக்கு மாற்றான இதே போன்ற பலமான கூட்டணியை அதிமுகவும் முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் பாஜகவையும் சமாளித்து, மெகா கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
ஜெயக்குமார்: பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்து கொண்டதில் இருந்தே, அதிமுகவுக்கான ஆதரவு எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.. திமுகவிலிருந்து சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க போவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடாமல் சொல்லி கொண்டேயிருக்கிறாரே தவிர, இன்னும் யாருமே கூட்டணிக்கு வரவில்லை. திமுக கூட்டணியையும் அசைக்க முடியவில்லை.
ஜிகே வாசன், ஜான் பாண்டியன் போன்றோர் எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று பெருத்த நம்பிக்கையில் காத்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அடுத்தடுத்த அதிர்ச்சி வந்தபடியே உள்ளன.
வாசன்: தமிழ் மாநில காங்கிரஸ் வாசன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாதன் போன்ற தலைவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்... இதைத்தவிர, அமமுக டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வமும் உள்ளிட்டோர் ஏற்கனவே பாஜகவின் விசுவாசத்துக்குரியவர்கள் என்பதால், கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதுபோக, தேமுதிக, பாமகவை கூட்டணிக்கு உள்ளே கொண்டுவந்து, அதிமுகவின் இழப்பை சரிக்கெட்ட பாஜக முயன்று கொண்டிருக்கிறது. அந்தவகையில், பாஜக வலுவான கூட்டணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தேமுதிக: அதிமுகவிலோ, இன்னும் கூட்டணிக்கான அறிகுறி தெரியவில்லை.. இப்போதைக்கு எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் கட்சிகள் மட்டுமே அதிமுகவில் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன.. பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர நினைத்தாலும், 2 கட்சிகளுமே ராஜ்யசபா சீட் கேட்பதால், அதிர்ந்து போயுள்ளது அதிமுக.
இதில், பாமகவிற்கு ராஜ்யசபா இடம் தர உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமகவுக்கு கொடுத்தால், தங்களுக்கும் ராஜ்யசபா சீட் தந்தாக வேண்டும் என்று தேமுதிக பிடிவாதம் பிடிக்கிறதாம். அதிமுகவில் இருப்பதே 62 எம்எம்எல்ஏக்கள் என்பதால், 2 எம்பி சீட் கிடைப்பது கஷ்டம்தானாம். அதனால், ராஜ்ய சபா சீட் தர முடியாவிட்டாலும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட 3 தொகுதிகளை தருவதற்கும் அதிமுக ஓகே சொன்னதாக தெரிகிறது. ஆனால், மதுரையையும் கேட்கிறதாம் தேமுதிக.
மதுரை தொகுதி: மதுரையை ராஜ் சத்யனுக்கு ஒதுக்கப்போவதாக அதிமுக சொல்லியும்கூட, தேமுதிக அதற்கு உடன்படவில்லையாம். எனவே, தேமுதிகவுடனான கூட்டணியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்தவகையில், பாஜக தன்னுடைய கூட்டணியில், தேமுதிகவை இழுத்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
இதற்கு நடுவில், கோவை மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான அம்மன் அர்ச்சுனன், கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
"2 பாஜக எம்எல்ஏக்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய போகிறார்கள். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பாஜகவில் இணைத்தது போல் இங்கும் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வடநாடு கிடையாது. இங்கிருந்து ஒரு தொண்டனை கூட பாஜகவில் இணைக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
யார் அவர்கள்: பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்துள்ள நிலையில், இப்படி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. யார் அந்த 2 பாஜக எம்எல்ஏக்கள்? என்று தெரியவில்லை.. ஒருவேளை 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைந்தாலும்கூட, அது வலுவான கூட்டணியை உருவாக்குமா? என்று தெரியவில்லை..
"ஒரு தொண்டனைகூட பாஜகவில் இணைக்க முடியாது" என்று அதிமுக சொல்லி கொண்டிருந்தாலும், வலுவான கூட்டணியை தமிழக பாஜக அமைத்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது.. எனவே, கூட்டணி தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் காய்நகர்த்தல், இனி வேகமெடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications