போயஸ் கார்டனில் அந்த பிரபலம்.. "தோழியின் தோழிகள்" தித்திப்பு நொடி.. யார் பாருங்க? சென்னை அதிமுக குஷி
சென்னை: போயஸ் கார்டனிலுள்ள, சசிகலா வீட்டிற்கு பிரபலங்களின் வருகை அதிகரித்தபடியே உள்ளது.. அந்தவகையில், பிரபலம் ஒன்றின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
சிவசங்கரி... கிட்டத்தட்ட 50 வருட காலம், தமிழ் படைப்புலகத்தின் மிகச்சிறந்த ஆளுமையாக வலம் வருபவர். நாவல், சிறுகதை, பயணக்கட்டுரை, இலக்கியக் கட்டுரை, மொழிபெயர்ப்புகள், சினிமா என அனைத்து தளங்களிலும் தன்னுடைய எழுத்தால் இயங்கியவர்..

விருதுகள்: "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயல்திட்டத்துக்காக, இந்தியாவையும், பயணக்கட்டுரைகளுக்காக உலகம் முழுவதும் வலம்வந்த படைப்பாளி.. இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான சரஸ்வதி சம்மான் விருதையும் தனதாக்கி கொண்டவர் எழுத்தாளர் சிவசங்கரி..
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்பதை பலமுறை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார் சிவசங்கரி... திரையுலகில் எத்தனையோ கலைஞர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களாக அறியப்பட்டாலும், பால்ய வயதிலிருந்தே சினேகத்துடன் பழகிய தோழி என்றால், அது சிவசங்கரியாகத்தான் இருக்க முடியும்.
அம்மு: ஜெயலலிதாவை பற்றி சிவசங்கரி சொல்கிறார், "ஜெயலலிதாவை நான் "அம்மு" என்பேன்.. அவர் என்னை "ஜிபு" என்பார்.. எங்களுக்கு இடையேயான அந்த அன்பு ஆழமானது. நான் அவர் வீட்டிற்கு சென்று அதிகாலை நேரத்தில் பலமுறை தூங்கிக் கொண்டிருக்கும் அம்முவை எழுப்பிவிட்டிருக்கிறேன். அப்போது அந்த முகத்தை பார்த்தால், மேகங்களிலிருந்து வெளிப்படும் முழு நிலவுபோல் ஜொலிக்கும்!
'நான் இன்னைக்கு ஃப்ரீ நீ வர முடியுமா? என்று அம்மு போனில் கேட்டாலே போதும், உடனே புறப்பட்டு வந்துவிடுவேன். உனக்கிருக்கிற புத்திக்கு நீ மட்டும் IFS படிச்சா, பெரிய டிப்ளமேட்டா வருவே அம்மு. ஏதாவது, நாட்டுக்கு அம்பாஸிடராகூட போயிடுவ" என்று நான் அவரிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அப்படிப்பட்ட புத்திசாலித்தனம். கெட்டிக்காரத்தனம் நிறைந்தவர் என் அம்மு" வழிந்தோடும் கண்ணீரை துடைத்துக்கொண்டே பலமுறை சிலாகித்திருக்கிறார் சிவசங்கரி.
கிரகப்பிரவேசம்: இன்று தன்னுடைய தோழியை பிரிந்திருந்தாலும், "தோழியின் தோழியை" நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.. சமீபத்தில்தான், சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் கிரகப்பிரவேசம் செய்திருந்தார்.
இந்த போயஸ் பங்களாவை சிறப்பாக கட்ட வேண்டும் என்று அன்றே திட்டமிட்டிருந்தாராம் சசிகலா.. 24,000 சதுர அடியில் வேதா நிலையம் உருவான நிலையில் அதைவிட பெரிதாகவே, இந்த வீடு கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தாராம்.
வேதா நிலையம்: வேதா நிலையத்தைப் போலவே கட்டிடம், ஒரு தரைதளம், 2 மேல் தளங்களுக்கு அனுமதி அப்போது வாங்கப்பட்டிருந்தது. அதாவது, கடந்த 2019 -ல் எம்பி தேர்தல் நடந்தபோதே இந்த திட்டத்திற்கு சிஎம்டிஏ அனுமதி தந்துவிட்டதாக சொன்னார்கள்.
ஆனால், அதற்குள் சிறைசெல்ல நேரிட்டது.. எனினும், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் கைவிட்டுப் போனாலும் போயஸ் கார்டனைவிட்டு போகக்கூடாது என்பதில் சசிகலா ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தாராம். இன்று ஒருவழியாக தன்னுடைய கனவு இல்லத்தில் நுழைந்திருக்கிறார் சசிகலா.. ரஜினிகாந்த் உட்பட அனைத்து பிரமுகர்களையும் இந்த இல்லத்தில் அழைத்து உபசரித்து வருகிறார்.
மகிழ்ச்சி: அந்தவகையில்தான், எழுத்தாளர் சிவசங்கரி, சசிகலாவை போயஸ் கார்டனில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்"நேரில் சந்தித்துள்ளார்.. தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுப்பொருளையும் வழங்கியிருக்கிறார்.. ஜெயலலிதா குறித்த பல்வேறு விஷயங்களை இந்த சந்திப்பில் இருவரும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது..
அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மறைந்தபோதிலும், அவருக்கு நெருக்கமானவர்களை எல்லாம் இன்னமும் மறக்காமல், அவர்களிடம் தொடர்ந்து சசிகலா பேணிவரும் இணக்கமானது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. "தோழியின்" தோழிகளின் இந்த சந்திப்பானது, அதிமுக வட்டாரத்தில், மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications