"அண்ணாமலைக்கு ரொம்ப தேங்கஸ்! எனது உடம்பில் ஓடுவதே திராவிட ரத்தம் தான்!" பரபரக்கும் டாக்டர் சரவணன்
சென்னை: அமைச்சர் கார் மீதான தாக்குதலுக்குப் பின்னர் பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். அதில் தமிழகத்தைத் தேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணனின் உடல் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த லட்சுமணன் உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தாக்குதல்
முன்னதாக நேற்றைய தினம் லட்சுமணனின் உடலுக்கு மரியாதை செலுத்த அமைச்சர் பிடிஆர் சென்று இருந்தார். அஞ்சலி செலுத்திட்டுத் திரும்பிய சமயத்தில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் சிலர் செருப்பு வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சந்திப்பு
சிலர் பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக விமர்சித்த அமைச்சர் பிடிஆர், உயிரிழந்த தியாகியின் உடலை அடக்கம் செய்துள்ள இந்த நேரத்தில் பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் குறித்துப் பேசுவது சரியாக இருக்காது என்று கூறி இருந்தார். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை திடீரென நேரில் சந்தித்தார்.

விலகல்
செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக அமைச்சர் பிடிஆரிடம் டாக்டர் சரவணன் நேரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவம் தனது மன அமைதியைக் கெடுத்துவிட்டதாகவும் இனி பாஜகவில் தொடர மாட்டேன் என்றும் கூறி இருந்தார். இந்தச் சூழலில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி டாக்டர் சரவணனை பாஜகவில் இருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார்.

திராவிட ரத்தம்
இந்நிலையில், இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த டாக்டர் சரவணன், "என்னைக் கட்சியில் இருந்து நீக்கியதற்கு அண்ணாமலைக்கு மிக்க நன்றி. எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் திராவிட கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். எனது உடம்பில் ஓடுவதும் திராவிட ரத்தம் தான். நான் அந்தக் கட்சியில் ஓராண்டு மட்டுமே இருந்தேன். ஆனால், பெரும்பாலான நேரம் மன நிம்மதி இல்லாமலேயே இருந்தேன்.

அண்ணாமலைக்கு நன்றி
எப்போதும் மதத்தை வைத்தே அரசியல் செய்வது எனக்கு ஒத்துவரவில்லை. நேற்று நடந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. இதன் காரணமாகவே அமைச்சர் பிடிஆரை நான் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். அமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வன்முறை அரசியல், மத அரசியல் தமிழகத்திற்கு ஒத்துவராது. இனியும் இந்தக் கட்சியில் விலகக் கூடாது என்றே இந்த முடிவை எடுத்தேன். இன்றே கட்சியில் இருந்து நீக்கியதற்கு அண்ணாமலைக்கு நன்றி" என்றார்.
Recommended Video

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன் மதுரையில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். 2021ஆம் ஆண்டில் இவருக்கு திமுக சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் ஒரு நாள் காலையில் பாஜகவில் இணைந்த அவர், அன்று மாலையை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், மதுரை மாநகர் பாஜக தலைவராகச் செயல்பட்டு வந்தார்.












Click it and Unblock the Notifications