“ஏன் அழுவுறீங்க குஷ்பு?” பாஜக அரசு செய்ததற்கு காங்கிரஸை சாடுவதா.. பாயிண்டை பிடித்த டாக்டர் ஷர்மிளா
சென்னை: கர்நாடகாவில் 200 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி விமர்சித்த பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவுக்கு டாக்டர் ஷர்மிளா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சித்தராமையா முதலமைச்சராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். கர்நாடக தேர்தலின்போது மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், 200 யூனிட் வரை பயன்படுத்தினால் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.

காங்கிரஸ் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த உடனே இந்த திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மகளிர் இலவச பேருந்து டிக்கெட் திட்டத்தை அமல்படுத்தியது சித்தராமையா அரசு. அதை தொடர்ந்து 200 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருக்கிறது.
இதற்கிடையே, 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கான மின் கட்டணத்தை கர்நாடக அரசு உயர்த்தி இருக்கிறது. ஜூன் மாதத்தில் இருந்து 200 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயப்படுத்தினால் ஒரு யூனிட்டிற்கு ரூ.2.89 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு கர்நாடக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மின்சார கொள்முதல் மற்றும் எரிபொருள் விலையை ஈடுகட்டும் விதமாக ஏப்ரல் மாத நிலுவை தொகையை சேர்த்து இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், ஜனவரி மாதத்திற்கான FPPCA கட்டணம் மார்ச் மாதமே கட்டணத்தில் சேர்த்து இருக்க வேண்டும் என்றும் கர்நாடக மின் விநியோக நிறுவனம் இதுபற்றி தெரிவித்து உள்ளது.
பில்லிங் பிரச்சினைகளால் அப்போது கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று கூறியுள்ள இந்த அமைப்பு, யூனிட்டுக்கு ரூ.1.49-ஐ ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட உள்ளது. கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ரவிக்குமார் இது பற்றி தெரிவிக்கையில், "மின்சார கொள்முதல் மற்றும் எரிபொருள் விலையை சரிகட்டும் தொகையை பல தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக மார்ச் மாதம் வசூலிக்க முடியவில்லை." என்று தெரிவித்தது.
இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு விமர்சித்து இருந்தார். அதில், "திமுக - காங்கிரஸ் கூட்டணியின் செயல்பாடுகள் எளிமையானது. பிரபஞ்ச அளவுக்கு இலவச வாக்குறுதிகளை அளித்துவிட்டு நிதி பிரச்சனையை காரணம் காட்டி சில துண்டுகளை வழங்குவார்கள்.
பொய் புகையை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி இந்த யுக்தி வேலை செய்யாது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கருக்கு இது பாடமாக இருக்கும். கடைசி ஆணி 2024 தேர்தலில் இருக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் பதிவுக்கு டாக்டர் ஷர்மிளா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "மின்கட்டண விலை உயர்வு கடந்த மே 11 ஆம் தேதி பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டது. சராசரி மின் பயன்பாடு 200 யூனிட்கள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் நிலையில் இந்த மின் கட்டண உயர்வு குடிமக்களை அதிகளவில் பாதிக்காது. ஏன் நீங்கள் இங்கு அழுகின்றீர்கள்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications