ஈரக்குலை நடுங்குது.. இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!
சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய நிலை தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர் கண்ணன் மிக கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்றம் அருகே பிரபல வழக்கறிஞர் சத்தியநாராயணனிடம் ஜூனியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் நீதிமன்றம் அருகே கொடுரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி அருகில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பட்டப்பகலில் மக்கள் பெருவாரியாகச் சூழ்ந்து இருக்கிற அந்த பகுதியில் வழக்கறிஞரை நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்தது கண்டனத்திற்குரியது.
என்ன காரணத்துக்காகப் படுகொலை நடந்தது என்ற உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமை. படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது அனைவரின் ஈரக்குலையும் நடுங்கும் அனவு படுபாதகமான ஒரு படுகொலை தமிழ்நாட்டில் ஓசூரில் நடத்திருக்கிறது.
மேலும் பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியருக்குப் பாதுகாப்பு இல்லை, படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் மடித்த வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மேலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை, அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை.
மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத முதலமைச்சர் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கு 200 வெல்லோம் என்று சொல்வது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா இல்லை போதை தமிழகமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார் பிரேமலதா.
முன்னதாக, பள்ளி ஆசிரியை கொலை பற்றி பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை நிலவி வரும் அளவிற்கு, நிர்வாகச் சீர்கேடு இந்த ஆட்சியில் நிலவுகிறது. எனவே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாதது மிகவும் கண்டனத்திற்குரியது. அதேபோல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஏற்படும் இந்த அவலங்கள் அந்த துறைக்கே மிகப்பெரிய வெட்கக் கேடாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications