கமலுக்கு தரவிருந்த ராஜ்ய சபா சீட்டை.. திருப்பி கேட்ட திமுக? சேகர் பாபு சந்திப்பு! இதுதான் பின்னணியா
சென்னை: தமிழகத்தில் வருகிற ஜூன் மாதத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் காலியாகிறது. அதனையொட்டி நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக நாடாளுமன்றத் தேர்தலின் போது கமலுக்கு உறுதி தந்திருந்தது திமுக தலைமை.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகத்திய கமலுக்கு, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கி அவரை சம்மதிக்கவைத்துவிட்டது திமுக.

கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், ஒரு லோக்சபா சீட் தருகிறோம்; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமலிடம் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார்.
கமலின் கோரிக்கை
இந்த பிடிவாதம், தலைமைக்கு (திமுக) உடன்பாடில்லை. இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அப்படின்னா எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்' என கமலிடமே கேட்கப்பட்டது. அவரோ, தென்சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குங்கள் என கேட்டார். இதில் தென்சென்னை மட்டும் திமுகவிடமும், மற்றதெல்லாம் திமுக கூட்டணி கட்சிகளிடமும் சிட்டிங் தொகுதியாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு.
லோக்சபா தான் முக்கியம்னா எங்க சின்னத்தில் நில்லுங்க; நீங்க விரும்பும் தொகுதியை ஒதுக்கிடுறோம். இல்லைன்னா, தேனி தொகுதியை ( காங்கிரஸ் தோற்றத் தொகுதி ) ஒதுக்குகிறோம். ஓ.கே.வா? ' என கேட்க, கமல் அதை மறுத்துவிட்டார். இப்படியே இருந்த நிலையில்தான், தொகுதி கிடைக்காததால் ராஜ்யசபா ஓ.கே. வா ? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காது என சென்டிமெண்டாக எங்க தலைமை பேசியது. வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் கமல் என்று அப்போது திமுக வட்டாரங்கள் சொன்னது. இதெல்லாம் லோக்சபா தேர்தல் சமயத்தில் கடந்த வருடம் நடந்தது.
ராஜ்ய சபா சீட்:
அதன்படி நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக நாடாளுமன்றத் தேர்தலின் போது கமலுக்கு உறுதி தந்திருந்தது திமுக தலைமை.
இதற்காக ஒப்பந்தமும் போடப்பட்டது. தற்போது, கமலுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் அந்த ஒரு சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக. ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம்.
திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். இதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமலின் விருப்பத்தை அறிய அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்துள்ளது திமுக தலைமை. அவரும் கமலை சந்தித்து பேசியிருக்கிறார். ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு பிரதிபலனாக வேறு வகையில் அதனை ஈடுக்கட்ட தயாராக இருப்பதாகவும் நடிகர் கமலிடம் சேகர்பாபு சொல்லியிருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. எந்த முடிவையும் தெரிவிக்காத கமல், குழம்பிப்போயிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications