கூட்டணி சிக்கலில் விசிக - திமுக? திருமாவளவனுடன் கூட்டணியா? - சீமான் சொன்ன பரபர பதில்!
சென்னை : விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக அதிமுக, பாஜகவினர் கூறி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. திருமாவளவன் உடன் நாதக கூட்டணி அமைக்குமா என்பதற்கு சீமான் என்ன பதில் அளித்துள்ளார் தெரியுமா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு 2 அடி நீளமுள்ள தங்க வேலை சீமான் காணிக்கையாகச் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு 10 லட்சம் உதவி நிதி உதவி செய்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பத்து லட்சம் நிதியுதவி விஷச் சாராயத்தை ஊக்குவிப்பதற்காகவா? கள்ளச்சாராய விவகாரம் நேற்று காய்ச்சி இன்று குடித்த நிகழ்வு அல்ல, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதனால் அதிமுக தப்பித்துக் கொண்டது. அரசு விற்றால் சாராயம் , தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்.
விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியாது. வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றதற்கு திருமாவளவன் தான் காரணம். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் திமுகவிற்கு திருமாவளவன் தேவை. அதனால் திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியே விட மாட்டார்கள்.
அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகிவிட்டது. நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதை திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியின் கோட்பாடுகளை ஏற்று திருமாவளவன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
எங்கள் கொள்கைகளை ஏற்காவிட்டால் கூட்டணி அமையாது, எத்தனை தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். தேர்தல் பரப்புரை ஜனவரி மாதம் தொடங்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதை மட்டுமே இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை. இருவருமே ஒன்றுதான். ஊழல் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் மேகதாது அணை கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்கமுடியுமா? மேகதாது அணையை வைத்துதான் கர்நாடகாவில் நாடாளுமன்ற வாக்கு சேகரிப்பு நடைபெறும். இன்னும் ஆறு மாதத்தில் மேகதாது அணை கட்டுவார்கள் இதை தடுக்க முடியுமா?
நாடு கூட்டாட்சி தத்துவத்தில் உள்ளது. மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி வரவேண்டும். மாநில கட்சிகளுக்கிடையே சுழற்சி முறையில் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவிலேயே வி.பி.சிங் ஆட்சிதான் சிறந்த ஆட்சி. மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியால் தான் சிறந்த கூட்டாட்சியை தரமுடியும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications