தமிழில் பொறியியல் கல்வி.. அமித் ஷா, அண்ணாமலைக்கு யார் எழுதி கொடுக்கிறார்கள்.. பொன்முடி பதிலடி!
சென்னை: பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா மற்றும் அண்ணாமலை ஆகியோரின் கருத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழகத்தில் உள்ள 163 கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
இந்த கல்லூரிகளில் 1.31 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக கல்லூரியை படிப்பை தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் காலி இடங்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் படி, வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரி பணியிடங்களை நிரப்பவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறைபாடு
அனைத்து தரப்புகளில் இருந்தும் கருத்துக்களை பெறுவதற்கான ஆலோசனை கூட்டம்தான் இது. அதேபோல் கல்லூரிகளில் ஒரே ஆண்டில் 4 ஆயிரம் துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகளில் ஆசிரியர் குறைபாடு இருக்காது. மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் மாணவர்களின் சிலபஸ் மாற்றம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

காலை, மாலை நேர கல்லூரி
தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேர கல்லூரிகளில் மாற்றம் தொடர்பான கேள்விக்கு, காலை மற்றும் மாலை என இருவேளை கல்லூரி வகுப்புகள் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசுதான். இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதால் தான் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் குறைவாக உள்ள கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மாநிலப் பட்டியலில் கல்வி
தொடர்ந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசின் கோரிக்கை குறித்து அண்ணாமலையின் கருத்து பற்றிய கேள்விக்கு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதும் கேட்டுக்கொண்டே இருந்தோம். இது எமர்ஜென்சி காலகட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம். அந்த அடிப்படையில் தான் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்வியை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

யார் எழுதிக் கொடுக்கிறார்கள்?
தொடர்ந்து தமிழில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு பற்றி அமித் ஷா பேச்சு பற்றிய கேள்விக்கு, தமிழில் பொறியியல் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா, அண்ணாமலை என பாஜகவின் பலரும் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு யார் எழுதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 2010ல் திமுக பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வந்துவிட்டது.

திமுகவின் சாதனை
அதேபோல் பொறியியல் கல்வியில் தமிழ் பண்பாடு பாடத்தையும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்திவிட்டோம். பொறியியல், கலை, அறிவியல் ஆகிய படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டதும், நடைமுறைப்படுத்தியதும் திமுக அரசு தான் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications