எடப்பாடி பழனிசாமி பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை.. தகுதியை இழந்துவிட்டார்.. ஓபிஎஸ் ஆவேசம்!
இபிஎஸ் பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை என்று ஓபிஎஸ் பேசியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமி பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை என்றும், அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தனது இரும்புப்பிடிக்குள் அதிமுகவை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே வேட்பாளர்களை அறிவித்தனர். இரட்டை இலை சின்னம் கோரி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க தீர்மானம்.. இபிஎஸ்ஸை விமர்சித்த ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம்
இதற்கிடையில், ஓபிஎஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்று, இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். எனினும், அவரது தரப்பில் வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓபிஎஸ் பேச்சு
சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், தமிழக அரசியலில் தனிப்பட்ட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அடிப்படை தொண்டர்கள் தான் கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதி.

பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொண்டர்கள் விருப்பப்படியே அதிமுகவில் இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டன. அதிமுக இபிஎஸ் கோஷ்டி பொதுக்குழுவில் கட்சி சட்ட விதிகள் சிதைக்கப்பட்டுவிட்டன. சர்வாதிகாரத்தின் உச்சநிலையில் பொதுக்குழுவில் தீர்மானங்கள் ரத்து என அறிவித்தனர். எடப்பாடி பழனிசாமி பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை. அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். தனது இரும்புப்பிடிக்குள் அதிமுகவை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பு நடத்திய நாடகம் அலங்கோலமாகியது.

மக்கள் தீர்ப்பு
2026 வரை ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறது. அதுதான் தேர்தல் ஆணையத்திலும் ஆவணமாக இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த சட்ட விதியை காப்பாற்றவே இரண்டாவது முறையாக தர்மயுத்தம் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை சின்னம் அதிமுகவுக்கு கிடைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்கி இருக்கிறோம். ஆனால் மக்கள் தீர்ப்பு என்று ஒன்று இருக்கிறது. அதுதான் மகேசன் தீர்ப்பு. அது கூடிய விரைவில் வரும் போது, அனைவருக்கும் புரியும். நாம் தர்மத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம்.

பொறுமையாக இருப்போம்
எங்களுடன் பயணிக்கும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். உங்களுக்கு முன்னால் எப்போது நாங்கள் நிற்போம். உங்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம். அதிமுக வெற்றிபெற பாடுபடுவோம் என்று அறிவித்தோம். ஆனால் அதற்கு எந்த மரியாதையும் இல்லை. அதேபோல் ஈரோட்டில் வாக்கு சேகரிக்க சென்ற போது, என்ன நடக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். அது வரும் 2ம் தேதி வாக்கு எண்ணப்பட்ட பின் தெரிய வரும். அதுவரை பொறுமையாக இருப்போம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications