நான் என்ன கைதியா?உங்க கூட வர.. என்னோட காரில் வறேன்.. விடாப்பிடி ரஞ்சனா .. தள்ளி ஏத்திய போலீஸ்
சென்னை: பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இழுத்து அடித்து திட்டிய பாஜக நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியாரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் வீடியோ எடுக்கக்கூடாது என்றும் நான் என்ன கைதியா? என்னுடைய காரிலேயே வருகிறேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் நீ நடம்மா... வா என்று தள்ளி காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தினார். படியில் தொங்கிய மாணவர்களை சரமாரியாகத் திட்டினார். ஏய் கீழே இறங்குடா. என்று சொல்லி அடித்தார்.

படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களின் கன்னத்தில் அடித்தார். பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசினார். உங்களுக்கு அறிவு இருக்கா?.. அறிவு கெட்ட நாயே என்றும் ஆவேசமாக திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ரஞ்சனா நாச்சியாருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.
இந்நிலையில் நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) காலை மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யவந்த காவல்துறையினருடன் ரஞ்சனா நாச்சியார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாரண்ட் இருக்கிறதா? என்ன காரணத்துக்காக கைது செய்கிறீர்கள்? எப்ஐஆர் காட்டுங்க என்றார். நாங்க உங்களை அரஸ்ட் பண்றோம் என்று காவல்துறையினர் கூறினர். அதற்கு அவரோ, அரஸ்ட் பண்ணுங்க.. ஆனால் என் பெட்ரூம் ஜன்னலை வந்து தட்டுறாங்க. நான் டிரஸ் மாத்திட்டு இருந்தேன் அப்போ தட்றாங்க என்று கோபத்தோடு சொன்னார்.
கதவை திறக்கலைன்னா பெட்ரூம்குள்ள குதிச்சிருவீங்களா என்று கேட்டார்.
அதற்கு காவல்துறையினரோ பதில் எதுவும் சொல்லாமல் கூட்டிட்டு வாங்க என்று கூறினர். வாங்க கோ ஆபரேட் பண்ணுங்க என்று காவல்துறையினர் அழைத்தனர். அதற்கு ரஞ்சனா நாச்சியாரோ நான் என் காரில் வறேன் என்றார். அதனை ஏற்க காவல்துறையினர் மறுத்தனர். நீங்க போய் போலீஸ் வண்டியில ஏறுங்க என்று கூறினர். ஆனால் ரஞ்சானாவோ மீண்டும் மீண்டும் நான் என்னோட காரிலேயே வறேன்.. நீங்களும் வாங்க என்று சொன்னார்.
அதற்கு பெண் காவல்துறையினரோ.. இல்லை அப்படி எல்லாம் வர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தனர். காவல்துறையினர் வந்துள்ள வாகனத்தில்தான் வரவேண்டும் என்று கூறினர். அதற்கு ரஞ்சனாவும் அவருடன் இருந்தவரும் நாங்க ஸ்டேசனுக்கு வந்து பதில் சொல்கிறோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

அப்போது காவல்துறையினர் நீங்க எங்களுடன்தான் வரவேண்டும் என்று சொல்லவே, அதை ஏற்க மறுத்த ரஞ்சனா, நான் என்ன கைதியா? உங்ககூட வருவதற்கு.. நான் என்னோட காரிலேயே வறேன்.. எனக்கு பயம் எதுவும் இல்லை என்று கூறினார். நாங்க உங்களை கைது பண்ணியிருக்கோம் என்று சொல்லவே, அப்போது ரஞ்சனா அரஸ்ட் வாரண்ட் இருக்கா? எப்ஐஆர் காப்பி காட்டுங்க என்று கேட்டார். இது எதுவுமே இல்லாமல் என்னை எப்படி கைது செய்யலாம் என்றும் கேட்டார் ரஞ்சனா.
என்னை வீட்டில் இருந்து அழைத்து போக வேண்டும் என்றால் எப்ஐஆர் காட்ட வேண்டும் என்று சொல்லி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரஞ்சனா. கடைசியில் தன்னோட காரில் ஏறப்போனவரை இரண்டு பெண் காவலர்கள் கையை பிடித்து இழுத்து கொண்டு வந்து காவல்துறையின் வாகனத்தில் ஏற்றினர். போங்க போங்க உட்காருங்க என்று சொல்லவே ஒருவழியாக வாகனத்தில் ஏறினார் ரஞ்சனா நாச்சியார்.












Click it and Unblock the Notifications