தமிழகத்தின் மா மன்னன்!... முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டும் சட்டசபையில் குறையாத புகழ்ச்சி!!
தமிழக சட்டசபையில் உதயநிதி நடித்த படங்களை வைத்து அவருக்கு புகழுரை சூட்டியுள்ளார் அமைச்சர் பி. மூர்த்தி. புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொல்லியும் புகழ்பாடுகின்றனர் அமைச்சர்கள்.
சென்னை: தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் அதனால் நேர விரையம் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியும் அதை கேட்காமல் அரை மணிநேரம் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகின்றனர் அமைச்சர்கள். தனது உத்தரவை மீறும் அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டசபையில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம். இதனால், வீணாக நேரம் மட்டுமே விரயமாகிறது. எம்.எல்.ஏக்கள், மக்கள் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினால் போதும் என கடந்த சில ஆண்டுகளாகவே கூறி வருகிறார் மு.க ஸ்டாலின்.
அவர் எதிர்கட்சித்தலைவராக இருந்த போதும் சரி, முதல்வரான பின்னும் சரி தனது கட்சி எம்எல்ஏக்கள் யாரும் புகழுரை பாடாமல் மக்கள் பிரச்சினைகளை பேசுங்கள் என்று கூறி வருகிறார். முதல்வர் உத்தரவை மதிக்காமல் தினசரியும் அமைச்சர்கள் பலர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வணங்கிதான் பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

சட்டசபையில் புகழ்ச்சி
சட்டசபையில் பேசும் முன்பாக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் முதல்வரை வாழ்த்தி வணங்கி உரையை தொடங்குவார்கள். ஜெயலலிதா காலத்தில் புகழுரை அதிகமாகவே இருந்தது. அப்படி புகழ்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும். அதை எதிர்கட்சியாக இருந்த போது திமுகவினர் கிண்டலடித்தனர். இப்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ளது. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

முதல்வர் உத்தரவு
கடந்த ஆண்டு சட்டசபையில் மானியக்கோரிக்கையின் போது முதல்வர் உத்தரவின் படி, தங்களது உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், கலைஞர், ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டனர். நேற்று பேசிய எ.வ. வேலு,ராமனுக்கு அனுமன் போல, ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் போல திமுக ஆட்சியமைக்க முதல்வருக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி என்று புகழுரை சூட்டினார்.

நகைச்சுவைத் தென்றல்
கே ஆர் ராமசாமி, பி வி நாராயாணசாமி, எஸ் எஸ் ராஜேந்திரன், எம் ஜி ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருக்கிறார் என பேசினார்.

செல்லப்பிள்ளை
இந்த முறை சில தினங்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நீங்கள் கலைஞரும் தலைவரும் கலந்தெடுத்த வார்பு. அதனால்தான் தமிழகம் முழுவதும் உங்களின் மேல் ஈர்ப்பு. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை... திருவல்லிக்கேணியின் தங்கப்பிள்ளை... மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை வணங்குகிறேன்." எனக் கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பேச்சு அவையில் இருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதேபோல் நேற்று அமைச்சர் பி.மூர்த்தியும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி பேசியுள்ளார்.

அமைச்சர் மூர்த்தி புகழுரை
நேற்றைய தினம் சட்டபையில்உதயநிதி எம்எல்ஏ நடித்த படங்களை வைத்து அவருக்கு அமைச்சர் மூர்த்தி புகழுரை சூட்டினார். அன்புக்கு இலக்கணமான உதயநிதி அவர்களே நீங்கள் நடித்ததோ 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்த படம் கெத்து. நீங்கள்தான் தமிழகத்தில் சொத்து. எதிரிகளை தனது சிரிப்பால் நண்பேண்டா என்று சொல்ல வைக்கும் நீங்கள் உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன், நிஜத்தில் நீங்கள் தான் மாமனிதன். நீங்கள் நிமிர்ந்தபோது தமிழ்நாட்டு இளைஞர்கள் இருந்தார்கள்.

மா மன்னன்
சரவணன் இருக்க பயமேன் என்று நீங்கள் நடித்த படம். உதயநிதி இருக்க பயமேன் என்று தமிழகத்து இளைஞர்கள் எண்ணம். நெஞ்சுக்கு நீதி பாத்திரமேற்ற நடிகர் மட்டுமல்ல நீங்கள், நெஞ்சுக்கு நீதி அடுத்த பாகம் ஆகவும் வாழ்கிறீர்கள். மாமன்னன் அடுத்த படம் அல்ல, தமிழ்நாட்டின் வருங்கால மாமன்னன் தாங்கள் தான். எங்களின் இதயங்களை வெல்லும் உதயமும் நீங்கள் தான் நிதியும் நீங்கள் தான்' என்று கூறியுள்ளார்.
Recommended Video


நடவடிக்கை எடுப்பாரா?
சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று கூறிய ஸ்டாலின், நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என்று கண்டிப்பாக கூறினார். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் கண்டிப்பாக கூறியுள்ளார் அதை எல்லாம் மீறி அமைச்சர்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர். நேரத்தை வீணடிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
