வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு இருந்த பெரிய பிரச்சினைக்கு தீர்வு.. ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: வந்தே பாரத் ரயிலில் பயணத்தின் போது பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆனால் டிக்கெட் புக்கிங் செய்யும் போதே நாம் உணவு என்ன என்பதை குறிப்பிட வேண்டும். டிக்கெட் புக்கிங்கின் போது குறிப்பிடவில்லை என்றால் பயணிகள் ரயிலுக்குள் உணவு வாங்க முடியாத நிலை இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி டிக்கெட் முன்பதிவின்போது உணவு வேண்டாம் என்று பயணிகள் குறிப்பிட்டு இருந்தாலும், பயணத்தின்போது பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் அதி நவீன சொகுசு ரயிலாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி - வாரணாசி இடையே அறிமுகம் செய்யப்பட்டது. பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவு, முழுவதும் சிசிடிவி என இதில் பல சிறப்பு வசதிகள் உள்ளன. தற்போது தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே ஆயத்தமாகி வருகிறது. பெரும்பாலும் இரவு நேர பயணமாகவும் தொலை தூரங்களுக்கு இயக்கும் வகையிலும் இந்த ரயிலை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.
வந்தே பாரத் ரயில்களில் உள்ள பல்வேறு நவீன வசதிகளை விட மேம்பட்ட வசதிகளுடன் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற ஆர்வமும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே உணவு தேவைப்பட்டால் அதை குறிப்பிட வேண்டும்.
பயணிகள் குறிப்பிட்டு இருக்கும் உணவை அவர்கள் இருக்கை எண்ணை வைத்து பயணிகளின் சீட்டிற்கே கொண்டு வந்து ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள் அளித்து வருகிறார்கள். அதேவேளையில், புக்கிங்கின் போது குறிப்பிடவில்லை என்றால் பயணிகள் ரயிலுக்குள் உணவு வாங்க முடியாத நிலை இருந்தது. ரயில் பயணத்தின்போது உணவுக்கான பணத்தை செலுத்த தயாராக இருந்தபோதிலும் உணவு அளிக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக ஊழியர்கள் மறுத்து விடுகின்றனர்.
இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாகத்தான் ரயில்வே ஒரு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் டிக்கெட் முன்பதிவின்போது உணவு வேண்டாம் என்று பயணிகள் குறிப்பிட்டு இருந்தாலும், பயணத்தின்போது பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தலைவருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ரயில்வே வாரியம் கூறியுள்ளது. அதே நேரத்தில் இரவு 9 மணிக்குள் மேல் டிராலிகளை தள்ளிக்கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications