விஜய் கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்.. வீடி தேடி வரும் ரேஷன் பொருட்கள்! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'தாயுமானவர் திட்டம்' தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்திருப்பது, பயனாளிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12.8.2025 அன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தாயுமானவர் திட்டம்
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வீடு தேடி ரேஷன் பொருட்கள்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
குடும்ப அட்டைதாரர்கள்
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் இத்திட்டத்திற்கு அரசுக்கு 35.92 கோடி ரூபாய் செலவாகும். மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகள்
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவின் சில திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும், தாயுமானவர் திட்டத்தையும் தொடர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.
அமைச்சர் வெங்கடரமணன்
இந்நிலையில், தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், அதனால் இந்த திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு
மேலும், திட்டம் எந்த இடையூறும் இல்லாமல் சீராக நடைபெற தேவையான நிதி வசதிகள் அனைத்தும் அரசு தரப்பில் செய்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். பயனாளிகளுக்கு தரமான சேவையை வழங்க அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications