மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000.. திட்டம் தொடர்பாக சந்தேகமா? தொலைப்பேசி எண்கள் வெளியீடு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தமிழகத்தில் தகுதி வாய்ந்த ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட எண்களில் தொடர்புக் கொள்ளலாம். இதற்கான எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
காலங்காலமாக இரண்டாம் பட்சமாக பார்க்கப்பட்டு வந்த பெண்கள் தற்போது தங்கள் உரிமைகளுக்காக தீவிரமாக போராட தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கையை அனைவரும் வலியுறுத்தும் கோரிக்கையாக மாற்றியுள்ளது. சொத்தில் சமபங்கு தொடங்கி, அனைத்து துறைகளிலும் குறிப்பிட்ட அளவில் பெண்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவது தொடர்பான வாதங்களும் கடந்த காலங்களில் மேலெழுந்தன. வீட்டில் சமைத்து, துணி துவைத்து, சுத்தம் செய்து என ஏராளமான வேலைகளை செய்தாலும் அவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படாததாகவே இருக்கிறது. இப்படி இருக்கையில், ஒரு வேளை நாங்கள் இந்த பணிகளை செய்யாமல் இருந்தால் ஆண்களால் எப்படி வெளியில் சென்று உழைக்க முடியும்? என்று பெண்கள் கேள்வியெழுப்ப தொடங்கினர்.
இந்த கேள்வி நியாயமானது என பல்வேறு அரசியல் தலைவர்களும் கூறினர். எனவே குடும்ப தலைவிகளுக்கு குறைந்தபட்ச உரிமை தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக இவர் பதவியேற்ற நிலையில், எப்போது உரிமைத்தொகை கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினர்.
இது பெரும் விவாதமாக எழுந்த நிலையில், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட முகாம் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இது தவிர விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன அளவுகோல்கள் உள்ளிட்டவை குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து அறிந்துக்கொள்ள சிறப்பு தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தொலைபேசி எண் (Land line No.) 044-25619208, வாட்ஸ் அப் எண் 9445477205, அழைப்பு மையம் எண் 1913 என அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர மண்டல வாரியாகவும் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மண்டலம்1 - 9445190201, மண்டலம் 2 - 044-25941079, மண்டலம் 3 - 9445190203, மண்டலம் 4 - 9445190204, மண்டலம் 5 - 9445190205, மண்டலம் 6 - 9445190206/9445190926, மண்டலம் 7 - 9445190207/044-26257880, மண்டலம் 8 - 9445190208, மண்டலம் 9 - 9445190209, மண்டலம் 10 - 9445190210, மண்டலம் 11 - 9445191432, மண்டலம் 12 - 9445190212, மண்டலம் 13 - 9445190213, மண்டலம் 14 - 9445190214, மண்டலம் 15 - 9445190215 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.












Click it and Unblock the Notifications