பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகமா... இனி அலைச்சல் வேண்டாம்... அதிகாரிகளுடன் வாட்ஸ் அப்பில் பேசலாம்..!
சென்னை: பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளுடன் பேசி தெளிவு பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் முதலில் மேற்கொள்ள வேண்டிய பணி பாஸ்போர்ட் எடுப்பதாகும். நகர்ப்புற மக்களை காட்டிலும் கிராமப்புற மக்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
மேலும், இன்று பலருக்கும் பாஸ்போர்ட் எப்படி எடுப்பது அதற்கு எங்கு விண்ணப்பிப்பது என்னென்ன ஆவணங்களை சமர்பிப்பது என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாது. இவர்களெல்லாம் பாஸ்போர்ட் எடுத்துக்கொடுக்க டிராவல் முகவர்களிடம் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு பாஸ்போர்ட் எப்போது வருமோ என்ற பதைபதைப்பிலேயே இருப்பார்கள்.

ஆனால் முறையான வழிகளில் சென்றால் உண்மையிலேயே பாஸ்போர்ட் எடுப்பது மிகவும் சுலபமானது தான். கடந்த காலங்களை காட்டிலும் இப்போது பாஸ்போர்ட் நடைமுறையை மிகவும் எளிதாக்கியுள்ளது மத்திய அரசு. இருந்த இடத்தில் இருந்தே யார் வேண்டுமானாலும் கணினியில் விண்ணப்பித்து நேர்காணலுக்கு அழைக்கும் போது மட்டும் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று வந்தால் போதுமானது.
இதனிடையே பொதுமக்களுக்கும், பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் நற்செய்தி வெளியிட்டுள்ளது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம். அதாவது பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளுடன் பேசி நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது போன்ற ஒரு புதுமையான முயற்சி இதற்கு முன் நடைமுறையில் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாராந்திர தொடர்பு திட்டத்தின் கீழ் சாட் வித் யுவர் பி.ஆர்.ஓ. என்ற தலைப்பில் பாஸ்போர்ட் சேவைகள், பாஸ்போர்ட் நடைமுறையில் உள்ள குறைகள், கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி கோவேந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது முதற்கட்டமாகவும் சோதனை முயற்சியாகவும் வாரத்திற்கு ஒருநாள் செவ்வாய்கிழமை அன்று மட்டும் இந்த சேவை நடைபெறும் என்றும் பொதுமக்கள் 73053 30666 என்ற எண்ணில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை வாட்ஸ் அப் வீடியோ காலில் அழைத்து பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாள் என இச்சேவையை இனி வரும் நாட்களில் அதிகரிக்கவும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் முன்னெடுத்துள்ள இந்த புதுமையான முயற்சி நிச்சயம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications